10
எழு பெரு வள்ளல்கள்
“எனக்கு ஒரு பற்றுக்கோடு தரமாட்டீர்களா?” என்று கேட்பது போல இருந்தது.
கொழு கொம்பு இல்லாமல் அந்தக் கொடி தளர்வதைக் கண்டான் பாரி. மக்கள் வறுமையினலோ பசியினுலோ பிணியினாலோ தளர்வதைக் கண்டால் அவன் மனம் பொறுப்பதில்லை; உடனே உதவி செய்ய முற்படுவான். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்னும் இயல்பே அவனிடம் இல்லை. கையில் எது கிடைத்தாலும் அதை அப்போதே கொடுத்துவிடும் வேகம் உடையவன். மக்களிடம் மாத்திரமா இந்த அன்பு? விலங்கினங்கள் துன்புற்றாலும், பறவைகள் வருந்தினாலும் அவன் சும்மா இருப்பதில்லை. அவற்றின் வருத்தத்தைப் போக்க ஏதாவது செய்ய முற்படுவான். அவன் உள்ளம் கருணைமயமானது.
அத்தகையவன் கண்ணில் பற்றுக் கோடின்றிப் பதை பதைத்து நிற்கும் முல்லைக் கொடிபட்டது. அது இயங்காது; வாய் பேசாது. ஆனாலும் உயிர்க் கூட்டங்களில் ஒன்று; ஓரறிவுடைய உயிர் அது. எல்லா உயிர்களுக்கும் கருணை காட்டும் பாரியின் உள்ளம் அந்த உயிரைக் கண்டும் இரங்கியது. அதன் தளர்ச்சி கண்டு மனம் நெகிழ்ந்தான். அதனைப் படரவிடப் பக்கத்தில் மரம் இல்லை. இருந்தால் அதுவே பற்றிக் கொண்டிருக்குமே! யாரேனும் உழவனாக இருந்தால் எங்காவது போய் ஒரு மூங்கிலைத் தேடிக் கொணர்ந்து நட்டு அந்தக் கொடி படரச் செய்வான். பாரிக்கு அந்த யோசனை தோன்றவில்லை. முல்லைக் கொடியின் தளர்ச்சியை உடனே போக்க வேண்டும். என்ன செய்வது? இப்போது அவனும் அந்தக் கொடியைப் போலப் பதைபதைத்தான்.