பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

எழு பெரு வள்ளல்கள்

தார்கள். ஒரு நாள் யாருக்கும் எதுவும் கொடுக்க முடியாதபடி நேர்ந்துவிட்டால் அன்று அவர்களுக்கு உள்ளமும் உடம்பும் வாடும் ஏதோ நோய் வந்தவர் களைப் போல இருப்பார்கள்.

கொடுக்கும் வள்ளல்களிடம் இசையிலே வல்ல பாணர்கள் வந்து இசை பாடிப் பரிசு பெறுவார்கள். கூத்தர்கள் அணுகிக் கூத்தாடி மகிழ்வித்துப் பல பொருள்களைப் பெறுவார்கள். பாட்டுப் பாடியும் ஆடியும் தம்முடைய கலைத் திறமையைக் காட்டும் பெண்களாகிய விறலியர்களும் பரிசு பெறுவதுண்டு. தடாரி என்ற தோல் கருவியை வாசித்துப் பரிசு பெறும் பொருநர் என்ற கலைஞர்களும் உண்டு. இவர்களேயன்றி வறுமையால் வருந்துவோரும் பிணியால் துன்புறுவோரும் கண்காது இல்லாமையால் உழைத்து வாழ முடியாதவர்களும் வேண்டியவற்றைப் பெற்றுச் செல்வார்கள். புலவர்கள் பாடிப் பரிசில் பெறுவார்கள். இத்தனை பேர்களுக்கும் பண்டமும் பொருளும் தந்து அவர்கள் துன்பத்தைப் போக்கும் உயர்ந்த பண்பை வள்ளல்களிடம் காணலாம். இவ்வளவு பேரும் தாம் பெற்ற நன்மையை எண்ணி மனமார வள்ளல்களை வாழ்த்துவார்கள். அவர்கள் பெற்ற பொருள்களும், அவர்கள் கூறிய வாழ்த்துக்களும் நெடுநாள் நிற்பவை அல்ல. அவர்கள் எவ்வளவுதான் மனமுருகி வாழ்த்தினாலும் அது அப்போதே காற்றோடே போய்விடும்; அவர்கள் பெற்ற பண்டமோ பொருளோ சில நாட்கள் அவர்களுக்குப் பயன்படும்; பிறகு செலவாகிவிடும். ஆகவே அந்த வள்ளல்களையோ அவர்களால் நலம் பெற்றவர்களையோ உலகம் சிலகாலம் நினைத்திருக்கும். அவர்கள் மறைந்தவுடன் அவர்கள் நினைவும் மறந்துபோகும்.