பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

25


ஆனால், அறுபடும் மகனது இடக்கண்ணில் மட்டும் கண்ணிர் ஒழுகியது.

“உடனே கண்ணன், நிறுத்துங்கள், என்னிடம் வாக்குக் கொடுத்ததற்கு மாறாக உங்கள் மகன் கண்ணீர் சிந்துகின்றான். ஆகையால் உங்கள் காணிக்கை ஏற்க மாட்டேன்” என்றான் கண்ணன்.

“இறைவா! என் மகன் முகத்தை நன்கு பார்த்தீர்களா! இடக்கண்ணிலிருந்துதானே கண்ணிர் வருகின்றது. கண்ணனுக்குக் காணிக்கையாகும் பேறு உடலின் வலப்பகுதிக்குத் தானே கிடைத்தது. நமக்கு அப்பேறு கிட்டவில்லையே என்று இடப்பக்கம் அழுகின்றது. ஆதலால் இக்காணிக்கையை ஏற்றுக் கொள்ள நீ மறுக்கலாகாது” என்றனர் தாயும் தந்தையும்.

அவர்கள் தன்பால் கொண்டுள்ள பக்தியைக் கண்டு பரவசமான கண்ணன். அறுப்பதை நிறுத்துங்கள் என்றான். அறுப்பது நின்றது. நின்றவுடன், மகன் எவ்வித ஊனமுமின்றி, ஒளிமுறுவலுடன் வந்து கண்ணன் அடியில் விழுந்து வணங்கினான்.

இந்த அற்புதக் காட்சியைக் கண்ட அர்ச்சுனனின் அகந்தை பறந்துவிட்டது. ஊன் உண்பவன் தவம்போல் ஒழிந்துவிட்டது.

கண்ணன் திருவடிகளில் விழுந்து வணங்கி, "கண்ணா! நீ எனக்குச் சாரதியாக இருந்தாய்! கீதை உபதேசித்தாய்! பகைவரை அழிக்க உதவினாய்! இழந்த நாட்டை மீட்டுக் கொடுத்தாய்! இந்த உதவிக்கெல்லாம் உயர்வான உதவியை இப்போது நீ எனக்குச் செய்துள்ளாய்!"

“மீள இயலாத அகந்தைப் படுகுழியில் வீழாமல் பாதுகாததாய்! இனி நான் என்றும் தவறு செய்யாதவாறு தடுத்துவிட்டாய்!” என்று மனமார வாயார வாழ்த்தினான். -