பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செயல் செயல் என வாழ்ந்த செம்மல். வாய்ச்சொல் வீரராக வாழாமல் சொல்லியவண்ணம் செய்து முடித்த பெருமகனாராகவும் திகழ்ந்தார்.

இவர், கற்றல், கற்பித்தல் முதலிய கல்வி நெறிகளில் சீரிய கோட்பாடுகளுடன் வாழ்ந்த பேராசிரியர். இவரது எழுத்தும் பேச்சும் இவர்தம் கல்விக் கொள்கைகளைப் பறைசாற்றுகின்றன. தூய வாழ்வினராகிய மூதறிஞர் நன்முறையில் நீதி நூல் இயற்றத் திட்டமிட்டிருந்தார். இவரது வாழ்க்கைக் குறிப்பு இதனை உணர்த்துகிறது. சிறுவர்களுக்குரிய நீதி நூல்களைப் பற்றி பேராசிரியர் எழுதிய ஆய்வுக் கட்டுரை பெருஞ் சிறப்புடையது.

இளைஞர்களுக்கு உடல், உள்ளம், உயிர் பற்றிய நல்வழிக் கருத்துக்கள், நல்வாழ்வுக் கோட்பாடுகள் தமிழில் எவ்வாறு சொல்லப்பட்டுள்ளன என்பதை நீள நினைந்தவர். நன்கு ஆராய்ந்தவர். தமிழ் நெடுங்கணக்கோடு தமிழ் அறக்கோட்பாடுகளும் வளரும் குழந்தைகள் நெஞ்சில் பதிய வைப்பதில் செயல் ஆர்வம் காட்டியவர்.

தமிழர் வாழ்வு நலக் கோட்பாடுகளை ஏழு நீதி நூல்களும் இலக்கிய இன்பமுறும் வகையில் எடுத்தியம்பும் திறத்தினை இவர்தம் ஆராய்ச்சி முன்னுரையில் அறிந்து கொள்ளலாம். பேராசிரியரின் கனவு நனவாகத் தமிழ்நாட்டுத் தொடக்கப் பள்ளிதோறும் மீண்டும் நீதிநூல் கல்வி கட்டாயப்படுத்தப்பட வேண்டும். இந்த அரிய நல்ல பணியைச் செய்த பேராசிரியர்க்குத் தமிழ் உலகம் கடமைப்பட்டுள்ளது.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/13&oldid=1356706" இலிருந்து மீள்விக்கப்பட்டது