16
ஏ, தாழ்ந்த தமிழகமே!
அது இருக்க இது ஏன்?
அது இருக்க இது ஏன் என்று மேல் நாடுகளிலே கருதி இருப்பார்களானால், ஆளில்லா விமானத்திற்குப் பிறகு அணுகுண்டு கண்டுபிடித்திருக்க முடியுமா? தொல்காப்பியம் நமக்கு இருக்கும்போது, நமக்கு வேறென்ன வேண்டும் என்றிருந்தால், அகமும் சிலப்பதிகாரமும் கிடைத்திருக்க வழியுண்டா? சிலப்பதிகாரமே போதுமென்றிருந்தால். கலிங்கத்துப்பரணி கிடைத்திருக்குமா? கலிங்கத்துப் பரணியே போதுமென்றிருந்தால். மனோன்மணீயம் தோன்றியிருக்க முடியுமா? மனோன்மணீயமே போதுமென்றிருந்தால், பாரதியாரின் தேசீய கீதங்களைக் கேட்டிருக்க முடியுமா? பாரதியாரின் தேசீய கீதங்களே போதுமென்றிருந்தால், தேசிகவிநாயகம் பிள்ளையின் தாயினுமினிய அன்பு குழைத்தூட்டும் பாக்களைப் பார்த்திருக்க முடியாது. .தேசிகவிநாயகம் பிள்ளையே போதுமென்றிருந்தால், நாமக்கல்லாரின் “கத்தியின்றி இரத்தமின்றி” என்ற புது மாதிரியான சண்டைத் தத்துவப் பாடலைக் கண்டிருக்க முடியுமா? அதுபோலத்தான் நாமக்கல்லாரே போதுமென்றிருந்தால் ‘கொலை வாளினை எடடா! மிகு கொடியோர் செயலறவே’ என்னும் பாரதிதாசனின் உணர்ச்சி மிக்க, புரட்சிகரமான பாடலை கேட்டிருக்க முடியாது.
காலத்தின் சிருஷ்டி கர்த்தா
பாரதிதாசன், மேல் நாட்டுக் கவிகளைப்போல் கலையைக் காலத்தின் கண்ணாடியாக்குகிறார். காலத்தையே சிருஷ்டிக்கிறார். காலத்தையே சிருஷ்டிக்கிறார் என்பது மாத்திரமல்ல, காலத்தை மாற்றுகிறார். காலத்தை மாற்றுகிறார் என்பது மட்டுமல்ல; மாறிய காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார். என்பது மாத்திரமல்ல; சமயம் கிடைத்தால் முன்னேயும் பிடித்துத் தள்ளுகிறார். தென்றல் வளரும்; நிலவு வளரும்; செல்வம் வளரும் அவைபோல அவரது கவிதைகளும் வளரவேண்டும்.