பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



200

ஐங்குறுநூறு தெளிவுரை


[து. வி.: பகலெல்லாம் தலைவனைக் குறியிடத்தே எதிர்பார்த்து, அவன் வராமையால் சோர்ந்து வாடிய தலைமகள் அவன் மாலைப் போதிலே வந்து, சிறைப்புறத்தே செவ்வி நோக்கி நிற்பதறிந்து, தோழிக்குச் சொல்வாள்போல, அவனும் கேட்டுணருமாறு, தன்னுடைய துயரநிலையைத் தெளிவுபடுத்துதாக அமைந்து செய்யுள் இதுவாகும்.]

அம்ம வாழி தோழி! நாம் அழ
நீல இருங்கழி நீலம் கூம்பும்
மாலை வந்தன்று, மன்ற --

காலை யன்ன காலைமுந் துறுத்தே.

தெளிவுரை : வாழ்வாயாக தோழி! இதனையும் நீ கேட்பாயாக. எமனைப் போன்ற கொடிய தென்றற்காற்றை முற்பட விட்டுக்கொண்டதாக, நாம் அவன் பிரிவுக்கு ஏங்கி அழும் படியாகச் செய்வதும், கருமையான பெரிய கழியிடத்து நீலமலரைக் குவியச் செய்வதுமான, மாலைப்போதும் வந்ததே!

கருத்து: 'எவ்வாறு தாங்கியிருப்பேனோ?’ என்றதாம்.

சொற்பொருள்: நீலம் - நீல மலர்கள்: 'அவை கூம்பும்’ என்றது இதழ்குவிந்து ஒடுங்கும் என்றதாம்; அவ்வாறே தலைவியும் தன் ஊக்கமிழந்து ஒடுங்கிச் சோர்வாளாயினள் என்பதாம்: காலையன்ன - காலனைப் போன்ற. காலை முந்துறுத்து - தென்றற் கூற்றை முன்னாக வரவிட்டு.

விளக்கம் : 'நாம் அழ' என்றது, மாலையின் குறும்புக்கும் பிரிவென்னும் படர் நோய்க்கம் ஆற்றாதே துயருட்படுவதைக் குறித்ததாம். 'நீல இருங்கழி நீலம் கூம்பும் மாலை' என்றது. அவ்வாறே பகறபோதெல்லாம் தோழியருடன் பேசியும் ஆடியும் மறந்திருந்த பிரிவின் வெம்மை, மாலைப்போதில் மேலெழுந்து வாட்டித் துயருறச் செய்வதைக் கூறியதாம். மாலை - மாலைநேரம்; மயக்கத்தையும் குறிக்கும்; அதுவே பிரிந்தாரைப் பெரிதும் துயர்ப்படச் செய்தலால். ’தென்றலை முன்னாக விட்டுத் தொடர்ந்துவரும் மாலை 'காலன் போன்றது’ என்பது, இவளை விரைவில் மணந்து கொண்டாலன்றி, இவளை இழக்கவே நேரும்' என்பதைத் தலைவனுக்கு உணர்த்தற்காம்.

117. சேர்ப்பனை மறவாதீம்!

துறை : வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத் தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.