பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. சிறுவெண் காக்கைப் பத்து

இப் பகுதியின் செய்யுட்கள் பத்தினும், சிறு வெண் காக்கை பற்றிய செய்திகளே கூறப்படுதலான், இப் பகுதியைச் 'சிறு வெண் காக்கைப் பத்து' என்று தொகைப் படுத்தினர்.

இது, நீர்ப்பாங்கிலே பெரிதும் காணப்பெறும் பறவையினத்துள் ஒன்று. கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து வாழும் இயல்பினது. காக்கையிற் சிறிதும், வலிகுறைந்ததும் ஆகும். மீனே இதன் உணவு; சில சமயங்களில் தவளை போன்றவற்றையும் தின்னும். நீருள் மூழ்கி மீன்பிடிக்கும் இதனை நீர்க்கோழி போலும் என்றும் மயங்குவர் பலர். 'வெண் காக்கை' என்று கூறினும், இதன் நிறம் வெளிறிய கருநிறமே.

நிலமும் பொழுதும் கருப்பொருள்களும் மனித உணர்வுகளையும் வாழ்வுப்போக்கையும் எவ்வாறு உருவாக்குகின்றன. உருவாக்கும் ஆற்றலின என்னும் உண்மையை அறிஞர்கள் மிகவும் வலியுறுத்தியிருக்கும் சால்பையும் இச் செய்யுள்கள் காட்டும்.

’பெருங் கடற் பரப்பில் இரும்புறம் தோயச் சிறுவெண்காக்கை பலவுடனாடும்' துறை (நற். 231) எனவும், 'சிறுவெண்காக்கைச் செவ்வாய்ப் பெருந்தோடு எறிதிரைத் திவலை ஈர்ம் புறம் நனைப்ப' (குறுந். 33) எனவும், பிறசான்றோரும் இதனைக் கூறுவர்.

161. நெஞ்சம் நோய்ப்பாலது!

துறை : ஒருவழித் தணந்துழி ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள் ஆற்றாளாய்ச் சொல்லியது.

[து. வி.: தலைவியை வரைந்து மணந்து கொள்ளாது, தலைவன் தன்மனையிடத்தேயே தங்கிவிட்டபோது, தலைவியின் உள்ளமும் உடலும் நலனழிந்து சிதைகின்றன. 'அவன் சொல் மறவான்; விரைவிலே வந்து நின்னையும் மணப்பான்' என்று தேறுதல் கூறும் தோழிக்கு, அவள் தன்னுடைய நிலையைக் காட்டிக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]