பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

299


தெளிவுரை : வலம்புரிச் சங்குகள் அங்குமிங்குமாக ஊர்ந்து போதலாலே உழப்பெற்ற நெடிய மணல்பரந்த அடை கரையிடத்தே, விளங்கும் கதிர்களையுடைய முத்தங்கள் இரவின் இருள் நீங்குமாறு இமைத்தபடியே விளங்கும் துறை பொருந்திய தலைவனே! நீ தந்த, முழங்கும் கடற்பிறந்த இவ் வெள்வளைகள் தாமும் நல்லவை தாமோ?

கருத்து: 'பிரிவின்கண் நெகிழ்ந்தும் வரவின்கண் செறிந்தும் நிலைமாறிப் போகாதே, என்றும் ஒரேபோலச் செறிந்திருந்து அழகு செய்வனவோ?' என்றதாம்.

சொற்பொருள்: வலம்புரி - வலமாகச் சுழித்த சங்குகள். வார் மணல் - நெடுகப் பரந்து கிடக்கும் மணல். அடைகரை - கடலலை மோதியலைக்கழிக்கும் முன்கரை. இலங்குகதிர்முத்தம் - கதிரிடும் ஒளிவிளங்கும் நன்முத்தம். இமைக்கும் - விட்டுவிட்டு ஒளிரும். அறைபுனல் - முழங்கும் நீர்; கடல்.

விளக்கம்: 'வளை தாமே நல்லவோ?' என்றது, அவை என்றும் ஒரே நலமுடைத்தாய் விளங்குதற் பொருட்டு நீதான் இவளை விரைவிலேயே மணந்துகொண்டு, என்றும் பிரியாத இல்லறவாழ்வில் திளைப்பாயாக என்றதாம்.

உள்ளுறை: 'வலம்புரி உழுத வார்மணல் அடைகரை இருள்கெட முத்தம் இமைக்கும்' என்றது. அலர் பேசும் பெண்டிரின் வம்புப் பேச்சாலே தலைவியின் இல்லத்தார் அடைந்துள்ள மனமயக்கம் நீங்குமாறு, நின் வரைவொடு வருதல் நல்லொளி நிறைப்பதாகும் என்றதாம். இவள் மேனியும் நல்லொளி பெறும்; பெற்றோரும் பெருமகிழ்வு கொள்வர் என்க.

குறிப்பு : 'முத்தம் இருள்கெட இமைக்கும்' என்றது இரவுக்குறி எனக் காட்டிற்று.

194. கடுத்தனள் அன்னை!

துறை : பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகளை எதிர்ப்பட்டு, மனைக்கண் நிகழ்ந்தது கூறிச் செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது.

[து. வி.: பகற்குறியிடத்தே தலைவியைச் சந்தித்தற்கு வந்துபோகும் தலைவனை, இடையே தடுத்து நிறுத்தித் தோழி