பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

 காலத்திற்கு முன்னர் நடைபெற்றிருக்க வேண்டும். அவ்வாருனால் கயத்தாற்றுப் போர் நடந்த பின் (1544) வெட்டும் பெருமாள் நாஞ்சில் நாடு சென்றானென்றும் அவனைப் பின்பற்றிச் சின்ன திருமலை சென்ருனென்றும் முன்னர் கூறினோம். அவ்வாறு நாஞ்சில் நாடு செல்லும் வழியில் வள்ளியூர்க் கோட்டை தாக்குதலுக்கு உட்பட்டிருக்கலாம். இதுதான் சான்றுகளினின்றும் நாம் வரக் கூடிய முடிவு.

ஆனால் 'ஐவர் ராசாக்கள் கதை' ஏட்டுப் பிரதி வள்ளியூர்க் கோட்டையைக் குலசேகரன் கட்டிய காலம் கொல்லம் 442 (கி. பி. 1226) என்று தெளிவாகக் கூறுகிறது கோட்டையழிந்தது. 60 ஆண்டுகளுக்குப் பின்னர் என்றும் கூறுகிறது. அப்படியானால் 1286 ஆகிறது. இக் காலம் புகழ், பெற்ற சுந்தர பாண்டியனும் குலசேகர பாண்டியனும் ஆண்டுவந்த காலம். குலசேகரன் காஞ்சியைத் தெலுங்குச் சோழர்களிடமிருந்து மீட்டான் என்று சாசனங்கள் தெரிவிக்கின்றன. கதைப் பாடலும், காஞ்சியில் குலசேகரன் வீராபிஷேகம் செய்துகொண்டான் என்று கூறுகிறது. குலசேகரன் வேணாடு மன்னனை யடக்க தெற்கே வந்தான் என்றும் கோட்டாற்றில் போர் நடந்ததென்றும் சான்றுகள் கூறுகின்றன. எனவே குலசேகரன் வள்ளியூர் வழியாக மதுரை சென்றிருக்கக் கூடும். புகழ் பெற்ற இக் குலசேகரனுக்குப்பின் தென்காசிப் பாண்டியர் வம்சத்திலும் இரண்டு குலசேகரர்கள் ஆண்டனர். இவர்கள் குலசேகரன் இறந்து 70 ஆண்டுகளுக்குப் பின் ஆண்டனர். ஆனால் இவர்கள் காலத்தில் எல்லாம் கன்னடியர் நெல்லை மாவட்டத்தினுள் படையெடுத்து வரவில்லை. எனவே கதைப் பாடல் ஆசிரியர் தமது கதாநாயகனாக, கதை சம்பவங்கள் நடைபெறுவதற்கு சுமார் 300 வருஷங்களுக்கு முன்பிருந்தவன் ஏற்றுக்கொண்டார். ஆனால் கோட்டை கட்டியது அவனே தவிர, கோட்டையை கன்னடியர் பாதுகாப்புக்கு எதிராகப் பாதுகாத்தது. பாண்டிய கிளைப் பரம்பரையில் வந்த வேறோர் குலசேகரனாவான். இடையே 60 ஆண்டுகள் என்று இவ்விடைவெளி இரண்டு மூன்று நூற்றாண்டுகளாக இருக்கலாம். அப்படியா கதைத் தொடக்கத்தில் வரும் குலசேகரனும், பின்னால் சிறைப்பட்ட குலசேகரனும் வெவ்வேறானவர்கள். கோட்டை கட்டிய ஆண்டு 1226 என்று கொண்டாலும், அழிந்த காலம் வித்தலராயன் கயத்தாற்றில் வெற்றி பெற்ற காலத்துக்கு அணித்தானதாகவே இருந்திருக்க வேண்டும். அக்காலம் 1544 அல்லது 1545 ஆகலாம். கோட்டை முன்னூறு ஆண்டுகள் நிலைபெற்றிருக்கலாம்.

கன்னடிய இளவரசி உடன்கட்டையேறிய ஊராக, வடுகச்சி மதில் என்ற ஊர் சுட்டிக் காட்டப்படுகிறது.