178
புதைமண்
எப்படி ஒருத்தன் சந்தர்ப்ப வசத்தால் ஓரினச் சேர்க்கையாளனாய் ஆகிறான் என்பதை உன்கிட்ட சொல்லப்போறேன். இதன் மூலம் கேய் பாய்ஸ் மீது விதிவசமா உனக்கு ஏற்பட்டிருக்கிற வெறுப்பை, நீக்கப் போறேன் அந்த லெட்டரை உன் கிட்டயே கொடுத்துட்டு, என்கிட்ட இருந்து, உனக்கு ஒரு விடுதலை உணர்வை தரப் போறேன் ஒருவேளை, நான் சொல்றது ஒனக்கு ஒரு மெண்டல் சிகிச்சையாக்கூட இருக்கலாம். சரி. அதோ அந்த மோட்டலுல போய் மரத்தடி இருக்கையில் உட்கார்ந்து சாவகாசமா பேசலாம். பேசி முடித்ததும் உன்னை உன் வீட்டுலயே டிராப் செய்றேன் ஒப்புக்கு வழியில சில வைட்டமின் மாத்திரைகளை வாங்கித் தாரேன். இப்ப, நீதான் என் பாஸ். மோட்டலுக்கு போகலாமா?”
“வேண்டாம். காரை ஓட்டியபடியே உன் கதையைச் சொல்லு...”
“சொல்றேன். மோட்டலுல ரூம்ல, ஒன்னை, நான், பழைய படியும் மிஸ்யூஸ் பண்ணிடுவேன்னு நீ பயப்படுறது நியாயம்தான். அதனால் காரை ஓட்டிக்கிட்டே பேசுறேன். ஏதாவது விபத்து வந்தா நீதான் பொறுப்பு.”
“என்னைத்தான் ஏற்கெனவே விபத்தாக்கிட்டியே...”
“உன் காலுல வேணுமுன்னாலும் விழுகிறேன். என் தங்கையோட எதிர்கால கணவனிடம் அப்படி நடந்துகிட்டது தப்புதான். நீ என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன். அதுக்கு முன்னால் என் கதைய கேளு.”
செல்வா, மௌனமாக இருந்தான். கார் ஒரே சீராக ஓடிக் கொண்டிருந்தது. சில சமயம் தாறுமாறாகவும் ஓடியது. ஏ.சி. கார் என்பதால் முன்னாலும் பின்னாலும் போகும் லாரிக்காரர்களும், இரண்டு சக்கர வாகனக்காரர்களும் திட்டோ திட்டோ என்று திட்டுவது, இவர்களுக்கு கேட்கவில்லை. மோகனன், ஒரு கேள்வியோடு தன் கதையைத் துவக்கினான்.
“எங்க பேலஸ்ல இருக்கிற எங்கம்மாவை நீ பார்த்திருக்கியா?”
“இது என்ன கேள்வி? ஒரே தெருவுல இருக்கிறவங்கள பார்க்காம இருக்க முடியுமா? ஒங்கம்மாவ பார்த்தால், கையெடுத்துக் கும்பிடலாம் போலிருக்கு அப்படிப்பட்டவளுக்கு இப்படி ஒரு பிள்ள... சீ...”
“ஒனக்கு அப்படி ஆனால், எனக்கு அந்த நாயை கல்லால் அடிச்சுக் கொல்லலாம் போலத் தோன்றும்.”