பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மொழிவகை

கா : நச்செள்ளையார் (நல் + செள்ளை + அவர்). சேர சோழ பாண்டியர். அமெரிக்கமொழிகள் பல்தொகுநிலைக்குச் சிறந்தனவாகக் கூறப்படும்.

மெக்சிக (Mexican) மொழியில், 'achichillacachocan' என்னும் பல்தொகுநிலைத்தொடர், 'நீர் சிவந்திருப்பதால் மக்கள் அழும் இடம்' என்று பொருள்படுவதாம். (alt-நீர், chichiltic-சிவந்த, tlacatl-மாந்தன், chorea-அழு)[1]

பிரிநிலையாவது, பகுசொன்னிலைச் சொற்கள் ஈறிழந்து நிற்பது.

கா : வந்தேன்-வந்து (மலையாளம்); brekan (O.E.) — break (Infinitive).

(2) மூலமொழி (Parent Language), கிளைமொழி (Daughter Language), உடன்மொழி (Sister Language) என மூவகையாக வகுப்பது ஒருமுறை.

திராவிடக் குடும்பத்தில், தமிழ் மூலமொழி; தெலுங்கு, கன்னடம் (கருநடம்), மலையாளம் முதலியவை தமிழுக்குக் கிளைமொழியும், தம்முள் ஒன்றோடொன்று உடன்மொழியு மாகும். நீலமலையிலுள்ள படகம் (படகர்மொழி) கன்னடத் தின் கிளைமொழி.

(3) இயன்மொழி (Primitive Language), திரிமொழி (Derivative Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை.

இவற்றுக்குத் தமிழையும் பிற திராவிட மொழிகளையும் முறையே காட்டாகக் கொள்க.

(4) இயற்கைமொழி (Natural Language), செயற்கை மொழி (Artificial Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை.

தமிழ் ஓர் இயற்கைமொழி. உவில்க்கின்ஸ் கண்காணியார் (Bishop Wilkins) எழுதிய கற்பனை மொழி ('A Real Character and a Philosophical Language) செயற்கை மொழிக்குக் காட்டாகும்[2] காங்கிரஸ் தலைவர்கள் உருதுவிற்கும் இந்திக்கும் இடைத்தரமாக, இந்துஸ்தானி என ஒன்றை அமைப்பதாகச் சொல்வது அரைச் செயற்கைக் கலவை மொழியாகும்.


  1. 1.Historical Outlines of English Accidence. p.2.
  2. 2.L.S.L.Vol.II.p. 50—63