பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை

மொழிநூற் பயிற்சி, அக்கலையின் ஆங்கிலப் பெயருக்கேற்ப (L. Gr. philos, loving, logos, discourse) சென்ற பத்தாண்டுகளாக எனது சிறந்த இன்பப் போக்காக இருந்துளது; இன்னுமிருக்கும்.

பள்ளியிறுதி (School Final), இடைநடுவு (Intermediate), கலையிளைஞர் (B.A.) முதலிய பல்வகைத் தேர்வுகட்கும் உரிய தமிழ்ச் செய்யுட் பாடங்கட்குத் தொடர்ந்து உரை அச்சிட்டு வரும் உரையாசிரியர் சிலர் தமது வரையிறந்த வடமொழிப் பற்றுக் காரணமாக, தென்சொற்களை யெல்லாம் வடசொற்களாகக் காட்டவே இவ்வுரை யெழுந்தனவோ என்று தனித் தமிழர் ஐயுறுமாறு, கலை-கலா: ஆவீறு ஐயான வடசொல்; கற்பு-கற்ப என்னும் வடசொல்' சேறு-ஸாரம் என்னும் வடமொழியின் சிதைவு; உலகு-லோக மென்னும் வடசொல்லின் திரிபு; முனிவன்-மோனம் என்னும் வடசொல்லடியாய்ப் பிறந்தது; முகம்-வடசொல்; காகம்-காக என்னும் வடசொல்; விலங்கு-திரியக்ஸ் என்னும் வடசொல்லின் மொழிபெயர்ப்பு எனப் பல தூய தென்சொற்களையும் வடசொற்களாகத் தம் உரைகளிற் காட்டிவருவது பத்தாண்டுகட்குமுன் என் கவனத்தை யிழுத்தது. உடனே அச்சொற்களை ஆராயத் தொடங்கினேன். அவற்றின் வேர்களையும், வேர்ப்பொருள்களையும் ஆராய்ந்தபோது அவை யாவும் தென்சொல்லென்றேபட்டன. அவற்றை முதலாவது வடமொழிக்கும் தென்மொழிக்கும் பொதுச் சொற்களாகவும், போலிப் பொதுச் சொற்களாகவுங் கொண்டு, இவ்வுண்மையை வேறொரு மொழியினின்றும் ஒருபோகு முறையான் உணர்த்துமாறு, ஆங்கிலத்திற்கும் தமிழுக்குமுள்ள பொதுச் சொற்களை ஆராயத் தொடங்கினேன். சேம்பர்ஸ் (Chambers), ஸ்கீற்று (Skeat) என்பவர்களின் ஆங்கிலச் சொல்லியலகராதி (Etymological Dictionary)களைப் பார்த்தபோது, ஆங்கிலத்திற்கும் தமிழிற்கும் பொதுவான சில ஆங்கிலச் சொற்கள் அகப்பட்ட துடன், அவற்றின் வாயிலாகவோ, அவற்றின் மூலமாகவோ இனமாகவோ உள்ள சில இலத்தீன் (Latin) கிரேக்கு (Grees)ச் சொற்களும் அகப்பட்டன. பின்பு இலத்தீன் கிரேக்கு