பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர்காலத் தமிழ்நூல்களும் கலைகளும்

௯௯

இதில் முக்கியமானவற்றைக் கூறி ஏனையவற்றை 'அனை நிலை வகை' யென்பதி லடக்கினார் தொல்காப்பியர். பண்டைத் தமிழாசிரியர் பலர் அறிவ(சித்த)ராயிருந்தமையின், அவரியற்றிய கலைநூல்களெல்லாம் 'அறிவன் தேயமாய்' அடங்கும்.

செய்யுளிலக்கணம்:— செய்யுளுறுப்புகளில் அடிப் படையானது அசை. மேலையாரிய மொழிகளிலெல்லாம், அசை வகுப்பு அசையழுத்தத்தைப்(Accentuation of syllables)ப் பொறுத்தது. அங்கு அசைகள் எடுப்பசை (Arsis - accented syllable) படுப்பசை (Thesis-unaccented syllable) என இரண்டாக வகுக்கப்பெறும். வடமொழியில் லகு குரு என்னும் பாகுபாடும் இம் முறை யொட்டியதே. தமிழிலோ, ஆரிய மொழிகளிற்போல எளிய முறையில் ஒவ்வோ ருயிரெழுத்தாய்ப் பிரியாமல், எழுத்துகள் தனித்தொலிப்பதும் இணைந்தொலிப்பதும்பற்றி, நேரசை நிரையசையென்றும், அவை குற்றியலுகரத்தொடு கூடிவருதல் பற்றி, நேர்பு அசை நிரைபு அசை என்றும் நான்காக வகுத்தனர். இவற்றுள் முன்னவை இயலசை; பின்னவை உரியசை.

செய்யுட்களில் வெண்பா, கலிப்பா என்னும் பாக்களும் அவற்றின் வகைகளும் பிறமொழிகட்கில்லை.

செப்பலோசைக்கு வெண்பாவும், அகவலோசைக்கு ஆசிரியமும் துள்ளலோசைக்குக் கலிப்பாவும், தூங்கலோசைக்கு வஞ்சியும் சிறந்தனவென்று கண்டுபிடித்ததும், அகவலை நூற்பாவிற்கும், கலியையும் அதன் வேறுபாடாகிய பரிபாடலையும் அகப்பொருட்கும், அம்போதாங்கவொத் தாழிசைக்கலி, கொச்சக வொருபோகு முதலிய கலிவகைகளைக் கடவுள் வாழ்த்திற்கும் மருட்பாவைக் கைக்கிளைக்கும் உரிமையாக்கினதும், தமிழரின் சிறந்த மதிநுட்பத்தையும் நுண்ணிய செவிப்புலனையுங் குறிப்பனவாகும். செப்பல் - விடையிறுத்தல். அகவல் - ஒருவரை விளித்துக் கூறல். கலிப்பாவின் சிறப்பைக் கலித்தொகையிற் கண்டறிக.

எப்பொருளுக்கும் ஏற்ற ஓசையிற் செய்யுள் செய்வதும், பலவகை வண்ணங்களிற் பாடுவதும், சொற்செறிவும், தமிழுக்கே சிறப்பாயுரியன. தமிழ் யாப்புமுறை மிகமிக விரிவானது.

தமிழ்ச் செய்யுள்களில் மிகச் சிறந்தது கலிப்பாவாகும். அதன் வகை யிரண்டற்கு இங்குக் காட்டுத் தருகின்றேன்.