பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௬௬

ஒப்பியன் மொழிநூல்

குற்றங்களைச் சீவக சிந்தாமணியிற் காந்தருவதத்தை யிலம்பகத்திற் கண்டு கொள்க.

இயம் என்பது வாத்தியத்திற்குப் பொதுப்பெயர். இயவர் = வாத்தியக்காரர்.

மேளம் என்பது ஒருவகைப் பறையையும், நிலையித் திட்டத்தை (Scale)யும் குறிக்கும் செந்தமிழ்ச்சொல்.

பண்டைத் தமிழ்நாட்டில் இசைத்தொழில் நடாத்தி வந்தவர் பாணர் என்னும் பறையர் வகுப்பினர். “பாண்சேரிப் பற்கிளக்கு மாறு” என்பது பழமொழி. 11ஆம் நூற்றாண்டுவரை பாணரே தமிழ்நாட்டில் இசைத்தலைமை வகித்து வந்தமை, நம்பியாண்டார் நம்பியாலும் அபயகுல சோழனாலும் தில்லையம்பலத்திற் கண்டெடுக்கப்பட்ட தேவாரத் திருப்பதிகங்கட்கு இசை வகுக்குமாறு, திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபினளான ஒரு பெண் அமர்த்தப்பட்டமையால் விளங்கும்.

ஆரியப் பிராமணர் இசை பயிலக்கூடாதென்று பண்டு ஒரு விலக்கிருந்தது. மனுதர்ம சாஸ்திரம் 4ஆம் அத்தியாயம் 15ஆம் விதியில், பிராமணர் “பாட்டுப்பாடுவது, கூத்தாடுவது ..... இப்படிக்கொத்த சாத்திர விருத்தமான கருமத்தினால் பொருளைத் தேடிக்கொள்ளக்கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.

வேதத்தை ஓதாது வரிப்பாட்டைப் பாடி, வேத ஒழுக் கத்தினின்றும் தவறியதால், சில பார்ப்பனர் விலக்கப்பட்டு ஓர் ஊருக்கு வெளியே போய்க் குடியிருந்தனர் என்னும் செய்தி சிலப்பதிகாரத்தில் (புறஞ்சேரி. அ. 38, 89),

“வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப் புரிநூன் மார்பர் உறைபதி”

என்னும் அடிகளிற் குறிக்கப்படுகின்றது.

சாமவேத (சுருக்கம்) மொழிபெயர்ப் பாசிரியரான ஜம்புநாதன் என்பவர், அவ் வேதத்தைச் சரளி முறைப்படி பாடத் தொடங்கியது பிற்காலமென்று குறித்துள்ளார்.[1]

வேத மந்திரங்கள் மன்றாட்டாதலின், இசைத்தமிழ்ப் பாட்டுப் போல ஆலாபித்துப் பாடப்பட்டிருக்க முடியாது.


  1. 1.சாம வேதம்: முகவுரை,பக்.19