பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௯௧௮

ஒப்பியன் மொழிநூல்

எனினும் பொருந்தும். நடக்கிற இடம் என்பதை நடமாடுகிற இடம் என்று சொல்லும் வழக்கை நோக்குக.

நடத்தல் என்பது, காலால் நடத்தலை மட்டுமன்றி ஒழுகும் வகையையுங் குறிக்கும். நடக்கை, நன்னடக்கை முதலிய வழக்குகளை நோக்குக.

நாடகத்தைத் தனிக்கூத்து, பாட்டொடு கூடியது, கதை தழுவியது என மூன்றாய் வகுக்கலாம்.

நாடகத்திற்குக் கூத்து என்றும் பெயர். கூத்து என்பது முதலாவது ஆட்டத்தை மட்டும் உணர்த்தி, பின்பு கதை தழுவிய நாடகத்தையும் உணர்த்துகின்றது. குதித்தாடுவது கூத்து. கூத்தாடுகிறான், ஆனந்த (உவகை)க் கூத்தாடினான் என்னும் வழக்குகளை நோக்குக.

நாடகத்தை முன்னோர் (1) வசைக்கூத்து, புகழ்க்கூத்து, (2) வேத்தியற்கூத்து, பொதுவியற்கூத்து, (3) வரிக்கூத்து, வரிச்சாந்திக் கூத்து, (4) சாந்திக்கூத்து, வினோத (இன்ப)க் கூத்து, (5) ஆரியக் கூத்து, தமிழக்கூத்து, (6) இயல்புகூத்து, தேசிகக்கூத்து, (7) அகக்கூத்து, புறக்கூத்து எனப் பலவகையில் இவ்விரண்டாக வகுத்தனர்.

இனி, உலகியற்கூத்து, தேவியற்கூத்து என வகுக்கவும் இடமுண்டு. தேவியலாவன அரங்கேற்றுகாதையிற் கூறப்படும் 11 ஆடல்கள் போல்வன. சாந்திக்கூத்தின் வகை :

(1) சொக்கம் - தனிநடம் (சுத்தநிருத்தம்).

(2) மெய் - தேசி, வடுகு, சிங்களம்.

(3) அவிநயம் - கதைதழுவாது பாட்டின் பொருளுக்கேற்ப வல்லபஞ்செய்வது.

(4) நாடகம் - கதை தழுவிவருவது.

அவிநயம் (அபிநயம்) என்னுஞ்சொல் ஓர் இருபிறப்பி.

விநோதக்கூத்தின் வகை :—

(1) குரவை

(2) கலிநடம் - கழாய்க்கூத்து

(3) குடக்கூத்து

(4) கரணம்

(5) நோக்கு - மாயம், கண்கட்டு முதலியன: