பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர்காலத் தமிழ்நூல்களும் கலைகளும்

௧௨௯

“நிலம் அளந்த கோலை 'உலகளந்த கோல்' என்று வழங்குவர். இக் கோல் பதினாறு சாண் நீளமுடையது... நிலங்கள் நூறு குழிகொண்டது ஒரு மாவாகவும் இருபது மா கொண்டது ஒரு வேலியாகவும் அளக்கப்பெற்றன.... அந்நாளில் நிலத்தின் எத்துணைச் சிறு பகுதியும் விடாமல் நுட்பமாக அளக்கப் பெற்றுள்ளது என்பது 'இறையிலி நீங்கு நிலம் முக்காலே இரண்டு மாகாணி அரைக்காணி முந்திரி கைக்கீழ் அரையே இரண்டுமா முக்காணிக்கீழ் முக்காலே நான்குமா அரைக்காணி முந்திரிகைக் கீழ் நான்கு மாவினால் இறைகட்டின காணிக்கடன்' என்பதனால் விளங்கும்.”[1] இங்குக் குறிக்கப்பட்ட அளவு 1/52428500000 வெளியாகும்.

வானநூல்— (Astronomy)

'நாள்கோள்' (புறத். 11) எனவே நாண்மீனும், (Lunar asterism), 'ஞாயிறு திங்கள்' (கிளவி. 58) எனவே, எழுகோளும் (Planets), அவற்றாற் பெயர் பெறும் ஏழு கிழமைகளும் (days), 'ஓரையும்'(Signs of the Zodiac) (கள. 45) எனவே இராசியும், 'காரும் மாலையும்' (அகத். 6), 'கூதிர் யாமம்' (அகத். 7), 'பனியெதிர் பருவமும்' (அகத். 8), 'வைகறை விடியல்' (அகத். 9), 'எற்பாடு' (அகத். 10), 'நண்பகல் வேனிலொடு' (அகத். 10), 'பின்பனி' (அகத். 12) எனவே பெரும்பொழுதும் (Seasons) சிறுபொழுதும் (Divisions of the day) தொல்காப்பியர்காலத் தமிழர்க்குத் தெரிந்தும் வழக்கிலு மிருந்தமை யறியப்படும்.[2]

(அசுவினி முதல் ரேவதியீறான) இருபத்தேழு நாள்மீன் (நட்சத்திரம்)கட்கும் பண்டைக்காலத்தில் வழங்கிவந்த தமிழ்ப் பெயர்கள், முறையே புரவி, அடுப்பு, ஆரல், சகடு, மான்றலை, மூதிரை, கழை, காற்குளம், கட்செவி, கொடுநுகம், கணை, உத்தரம், கை, அறுவை, விளக்கு, முறம், பனை, துளங்கொளி, குருகு, உடைகுளம், கடைக் குளம், முக்கோல், காக்கை, செக்கு, நாழி, முரசு, தோணி என்பன. இவற்றுக்கு வேறு பெயர்களுமுண்டு. அவற்றை நிகண்டுகளிற் கண்டுகொள்க. வெள்ளி, உடு, விண்மீன் என்பவை பொதுவான நட்சத்திரப் பெயர்களாகும்.

கோள்கள் ஏழென்றே தமிழர்கொண்டு, அவற்றின் பெயர்களால் ஏழுநாட்கொண்ட வாரமென்னும் அளவை ஏற்படுத்தினர். ஆனால், ஆரியர் கோள்களின் தொகையை மிகுத்துக்


  1. 1.முதல் குலோத்துங்கச் சோழன்.பக்.84,85.
  2. 2.சோழவமிச சரித்திரச் சுருக்கம் பக்.58