பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பியன் மொழிநூல்



முன்னுரை

ஆரிய திராவிடப் பகுப்பு

இந்திய சரித்திரத் தந்தையும் 'இந்தியாவின் முந்திய சரித்திரம்' (Early History of India) என்னும் நூலின் ஆசிரியருமான வின்சன்ற்று சிமித் (Vincent Smith) என்பவர், அந்நூன் முகவுரையில் பின்வருமாறு கூறியிருக்கிறார்:—

"வடமொழிப் புத்தகங்கள் மேலும் இந்தோ-ஆரியக் கருத்துகள் மேலுமாக, வடக்கே அளவுக்கு மிஞ்சிய காலம் கவனஞ் செலுத்தப்பட்டு வந்திருக்கின்றது. ஆரியமல்லாத பகுதியைத் தகுந்தபடி கவனிப்பதற்குக் காலம் வந்து விட்டது.

"இப்புத்தகம் இந்தியாவின் அரசியற் சரித்திரத்தைச் சுருங்கக் கூறுவதற்கே எண்ணி வரையறுக்கப்பட்டுள்ளமையால், முன் சொல்லப்பட்ட ஆராய்ச்சி வழியைப் பின்பற்றக் கூடாதவனாயிருக்கின்றேன். ஆயினும், அகால முடிவ டைந்த ஒரு பெயர் பெற்ற இந்தியக் கல்விமான்[1] கவனித்தறிந்தவை சில, கருத்தாயெண்ணுதற்குரியனவாதலின் அவற்றை இங்குக் கூறாதிருக்க முடியவில்லை. அவையாவன:

இந்தியா சரியானபடி தெற்கிலுள்ளது

"வட இந்தியாவில் சமஸ்கிருதத்தையும் அதன் சரித்திரத்தையும் படித்து, இந்து நாகரிகத்தின் அடிப்படைக் கூற்றைக் காண முயல்வதானது, அக் காரியத்தை மிகக் கேடானதும் மிகச் சிக்கலானதுமான இடத்தில் தொடங்குவதாகும். விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள இந்தியத் தீபகற்பமே இன்றும் சரியான இந்தியாவாக இருந்துவருகின்றது. இங்குள்ள மக்களிற் பெரும்பாலார் ஆரியர் வருமுன்பு தாங்கள் கொண்டிருந்த கூறுபாடுகளையும்,மொழிகளையும், சமுதாய ஏற்பாடுகளையுமே இன்றும் தெளிவாகக் கொண்டிருந்து வருகிறார்கள்.


  1. 'P. சுந்தரம் பிள்ளை, M.A.