பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள்


இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
றுணைத்துணை வேள்விப் பயன்" (குறள். 87),

என்னுங் குறளில், விருந்தைத் திருவள்ளுவர் வேள்வி யென் தமை காண்க

வேந்தன், வாரணன் முதலியோர்க்குச் செய்யும் தேவ வேள்வியும், பேய்கட்குச் செய்யும் பூத வேள்வியும், முன்னோர்க்குச் செய்யும் தென்புலத்தார் வேள்வியும், விருந்தினர்க்குச் செய்யும் மாந்தர் வேள்வியுமெனத் தமிழர் செய்துவந்த வேள்வி நான்கு. இவற்றொடு மறையோதுதலைப் பிரமயாகம் என்று சேர்த்து, பஞ்சமகாயக்ஞம் என்றனர் ஆரியர், இதன் பொருந்தாமையை அறிஞர் அறிக, ராஜசூயம், அசுவமேதம் முதலிய ஆரிய வேள்விகள் தமிழர்க்குரியவை யல்ல, தமிழரசர் அவற்றை வேட்டது பிற்காலமாகும், மதம் - Religion

முதலாவது, முற்கூறிய சிறு தெய்வ வணக்கங்களே தமிழர்க்கிருந்தன. பின்பு அவற்றிலிருந்து பெருந்தெய்வ வணக்கமாகிய மதம் தோற்றுவிக்கப்பட்டது.

குறிஞ்சித் தெய்வ வணக்கத்தினின்று சைவமும், முல்லைத் தெய்வ வணக்கத்தினின்று திருமாலியமும் தோன்றின, பாலைத் தெய்வமாகிய காளி, சிவபெருமானுக்குத் தேவியாகக் கொள்ளப்பட்டாள். மருதத்தெய்வமும் நெய்தல் தெய்வமும் கடைக்கழகக்காலம் வரை வணங்கப்பட்டுப் பின்பு கைவிடப்பட்டன.

சேயோன் என்னும் பெயரின் மறு வடிவமே சிவம் என்பது சிவ-சே (மரூஉ), சிவ+அம் =சிவம். சிவம்+(அன்) = சிவன் சே+= சேய், சே+ஒன் = சேயோன், சேந்தோன் சேந்தன் சிவன், சேயோன் சேந்தன் என்னும் மூன்றும், சிவந்தவன் என்று பொருள் பட்டு முருகனையே அல்லது ஒரு தெய்வத்தையே முதலாவது குறித்தன.

சேய், சேயோன், குமரன் என்னும் பெயர்கட்கு. மகன் என்று தவறாகப் பொருள்கொண்டு, சிவம் என்பது சேயோனின் தந்தையென, ஒரே தெய்வத்தை யிரண்டாகக் கூறிவிட்டனர் ஆரியர். இங்ஙனம் செய்தது. ஆரியத்தெய்வ மாகிய ருத்திரனைச் சிவத்தோடிணைத்தற்கும் உதவிற்று.