பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

முன்னுரை

கொண்டு, ஊழிமுதியதாய் நிலைத்துப்போன ஒன்றே யன்றிப் புத்தம்புதிதான ஒன்றன்று என்பதே.” [1]

ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தபோது, வடஇந்தியாவில் இருந்தவர்கள் பெரும்பாலும் திராவிடர்களே. அவர்களுள், நாட்டு வாழ்நர் நாகரிகராயும் காட்டு வாழ்நர் அநாகரிகராயுமிருந்தனர். ஆரியர் தங்கள் பகைவரிடமிருந்து 99 கோட்டைகளைப் பிடித்துக் கொண்டார்களென்று, ஆரிய மறையிலேயே கூறியிருப்பதால், அரசியல் நாகரிகம்பெற்ற பல சிறுநாடுகள், ஆரியர் வருமுன்பே வடநாட்டிலிருந்தமை யறியப்படும்.

வட இந்தியாவினும், தென் இந்தியா உழவு, கைத்தொழில் வாணிகம், அரசு, கல்வி முதலிய பல துறைகளிலும் மேம்பட்டிருந்தது; பொன், முத்து, வயிரம் முதலிய பல வளங்களிலும் சிறந்திருந்தது. இதைச் சேர சோழ பாண்டிய அரசுகளினாலும், தமிழ்நாட்டிற்கும் அசீரியாவிற்கும் நடந்த நீர்வாணிகத்தாலும், தமிழிலிருந்த கலைநூற் பெருக்கினாலும், பிறவற்றினாலும் அறியலாம்.

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறும் நல்லுலகத்து”

என்றார், தொல்காப்பியரின் உடன்மாணவரான பனம்பாரனாரும்.

ஆரியர் தமிழ்நாட்டிற்கு ஒரேமுறையில் பெருங்கூட்டமாய் வரவில்லை. சிறுசிறு கூட்டமாய்ப் பலமுறையாக வந்தனர். முதலாவது, காசியபன், விசிரவசு முதலியவர் தமித்து வந்து அசுரப்பெண்களை மணந்தனர். பின்பு ஆரியர் தமிழ் கற்றுத் தமிழாசிரியராயும், பின்பு மதவாசிரியராயும் அமர்ந்த பின், தமிழரசரே பலமுறை பார்ப்பனரைக் கூட்டங்கூட்டமாய் வடநாட்டினின்றும் வருவித்துத் தமிழ்நாட்டிற் குடி யேற்றியிருக்கின்றனர்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனைக் குமட்டூர்க் கண்ணனார் என்னும் பார்ப்பனப் புலவர் பாடிப்பெற்ற பரிசில், உம்பர்க்காட்டு ஐஞ்ஞூறூர் பிரமதாயமும் முப்பத்தெட்டியாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகமும் என்று, பதிற்றுப்பத்தில் (2ஆம் பத்து) கூறப்பட்டுள்ளது.


  1. * Mohenjo-Daro, Vol.I, Preface, pp.v-vii