பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரிய தமிழப் போர் தொன்றுதொட்டதால்

61

“ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்
கிரவின் இளிவந்த தில்”.

[1]

முதலிய பல குறள்கள் ஆரியவொழுக்கத்தைக் கண்டிப்பன வாகும்.

(3) பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

“வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பா லொருவன் கற்பின்
மேற்பா லொருவனு மவன்கட் படுமே”

[2]

இது ஆரியக் கொள்கைக்கு மாறாகும்.

(4) கம்பர்

கம்பர் ஒருமுறை வறுமையுற்றிருந்தபோது, பசியால் வாடி, ஒரு செட்டி கடைக்குச் சென்று அவல் கேட்டார். அவன் போணியாகவில்லையென்று சொல்லிவிட்டான். பின்பு, செக்காட்டிக்கொண்டிருக்கும் ஒரு செக்கானிடம் சென்று, பிண்ணாக்குக் கேட்டார். அவன் “இன்னும் எண்ணெயெடுக்க வில்லை” என்று சொல்லிவிட்டான். அதன்பின், ஒரு பார்ப்பான் வீட்டிற்குச் சென்று உணவு கேட்க, அவன் “சூத்திரனுக்குச் சோறிட்டால் குற்றம், போ” என்று சொல்லிவிட்டான்.

பின்பு, கம்பர் காட்டு வழியாகச் சென்றுகொண்டிருக்கும் போது, அங்கு உழுதுகொண்டிருந்த ஓர் உழவன், கம்பர் சோர்வைக் கண்டு, தான் வைத்திருந்த கூழை அவருக்கு வார்த்து, அவர் பசியைப் போக்கினான். அப்போது கம்பர்,

“செட்டிமக்கள் வாசல்வழிச் செல்லோமே செக்காரப்
பொட்டிமக்கள் வாசல்வழிப் போகோமே — முட்டிபுகும்
பார்ப்பா ரகத்தையெட்டிப் பாரோமே எந்நாளும்
காப்பாரே வேளாளர் காண்”

என்று பாடினார்.

கீழ்வரும் கம்ப ராமாயணச் செய்யுளால், பார்ப்பனர் பேரவாவுடையவர் என்று கம்பர் கருதினதாக அறியலாம்.


  1. 1.குறள். 1066
  2. 2.புறநானூறு. 183