பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

69 |  வெள்ளியங்காட்டான் 

உன் இந்தக் கடிதத்திலிருந்த சில வாக்கியங்கள் இரண்டு முறை படித்தேன். தெளிவும், அழுத்தமும் நிறைந்த கருத்தோட்டம் என்னை மகிழ்வித்தது. உன்னை மேன்மேலும் உயர்த்திக் கொள்வதில், வாழ்க்கையில் அமைதி நிறுவுவதில் முயன்று கொண்டிருக்கிறாய் என்பதைக் காட்டிலும் உன்னிடம் நான் பெறத் தக்கது வேறொன்றுமில்லை.

இந்த மாதம் நான் உன்னிடம் எதிர்பார்த்தது 30 ரூபாய்கள்தாம். ஆனால், 80 ரூபாய் நீ அனுப்பியிருக்கிறாய். இது மிகவும் செளகர்யமாக என் காரியங்களுக்கு உதவியது. வீட்டைச் சுற்றி நல்ல வேலி போட்டிருக்கிறேன். உள்ளே இருக்கும் இடத்தை இரண்டு உழவு செய்தும் முடிந்தது. அதில் இன்னும் 20 நாளில் மிளகாய்ச் செடி பயிரிட்டுவிடுவேன்.

வயல் நடவு ஆடி மாதம்தான் நடைபெறும். ஆனால் அதற்கு முன்பிருந்தே அதில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. நாளைய தினம் உண்டிமாளம் போக இருக்கிறேன். அங்கு ஓரளவு பண்படுத்தப்பட்ட நிலம் இருக்கிறதாகத் தகவல். அது முடிந்தால் மிகவும் நல்லதாக அமைந்துவிடும். அதற்கான காலம் இன்னும் வரவில்லை . ஆயினும் சீக்கிரம் அது வந்து தீரும். இது நிற்க.

நீ நன்னூலை மறுபடியும் ஆராய்ந்து அறிந்து கொள்வாய் என்று நம்புகிறேன். உன் இருதயம் ஒரு இலக்கணப் புத்தகமாக இருக்க வேண்டுமென்பதே என் ஆசை. மொழியைப் பற்றிய அனைத்து விவரமும் முன்கூட்டி அறிந்து கொண்டால் பின்பு அது உனக்குப் பேருதவியாக இருக்கும். தேக்கமில்லாமல் குறிக்கோளை நோக்கி முன்னேறிக் கொண்டேயிருப்பதுதான் நிலையான இன்பத்தின் அடிப்படை. கீர்த்தி அடையும் வழியும் அதுவே. முயற்சியின் வலிமை சொல்லில் அடங்குவதன்று. எப்படி ஒரு சிறு செடியின் நூலைப் போன்ற வேர் பெரும் பாறைகளையும் ஊடுருவவல்லதென்பதை எண்ணிப்பார்.

இடைவிடாத முயற்சிக்கு, நிலையான ரழ்வுக்குச் சரியான உவமானம் ஒரு செடி.