பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

72 |  ஒரு கவிஞனின் இதயம்

 72|ஒரு கவிஞனின் இதயம்

வழிய இது மிகவும் அதிகம். கடவுளிடம்கூட நாம் எதையும் கேட்டுத் தலைவணங்க வேண்டாம். நமக்குள்ள அறிவை, நமக்குள்ள ஆற்றலை நாம் சரியான வழியில் செயல்படுத்துவதே முறை. கடவுள் ஒருவர் உண்டெனில் அவர் விருப்பமும் இதுவேயாம்.

ஒருவருக்கொருவர் அஞ்சிவாழ்வதும் கூடாது. அது போலவே அடிமைப்படுத்தி வாழ்வதும் கூடாது. தந்தையாயினும், தனயனாயினும் அனைவர்க்கும் இது பொருந்தும். சமத்துவத்தில்தான் வாழ்க்கையின் இரகசியமே அடங்கியிருக்கிறது. சீரான செப்பனிடப்பட்ட பாதையில் நடக்கும் பிரயாணி பின்னால் திரும்பிப் பார்க்கமாட்டான். உன்னுடைய போக்கும் இத்தகையதாகவே யிருக்கட்டும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் போதுமான ஆற்றல் இயல்பாக அமைந்திருக்கிறது. ஆனால், அதை எல்லோரும் கண்டு கொள்ள வேண்டும். கண்டறிந்து செயல்பட வேண்டும். காலம் எதற்காக இருக்கிறது? ஆற்றல் எதற்காக இருக்கிறது? செயல்படவே அல்லவா? ஆகவே நீ செயல்படு. ஒவ்வொரு கணமும் செயல்படு. ஓடாமலும் உட்காராமலும் நிமிர்ந்து நட. உன் உன்னதமான குறிக்கோளை நோக்கி மனம் தளராமல், உறுதி குலையாமல் நடந்து கொண்டேயிரு. கிழக்கில் உதித்த கதிரவன் மேற்கு நோக்கிச் செல்வதைப் போலவே உன் செயலும் இருக்கட்டும்.

உன் குறிக்கோள் உயர்ந்ததாக இருந்தால் - இதை அடைவதில் நீ வெற்றி பெற்றால் அது உனக்கு மட்டும்தானா மகிழ்ச்சியளிக்கும்? இல்லை அந்த உன்னதமான வெற்றி உன் சந்ததிக்கு - உன் உற்றார் உறவினருக்கு - உன் ஊருக்கு - உன் நாட்டுக்கு - ஏன் இந்த உலகத்திற்கே மகிழ்ச்சியளித்தவனாகிறாய். ஆதர்ச ஆண்மகனாகிறாய்; மற்றவர்களால் போற்றத்தக்கவனும் நீயே ஆகிறாய்.

நீண்ட பிரயாணம் செய்யப் புகுந்த ஒருவன் தன் கட்டுச் சோற்றை வீணாக்க மாட்டான். தண்ணிர்க் குவளையை வற்றவிட மாட்டான். தன் கால் செருப்பையும் குடையையும் எறிந்துவிடமாட்டான்.