பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊருக்கு அவலாகி...

105



"ஆமா ஒம்மயும் மாயாண்டி மவா வாடா போடான்னு பேசுனாளாமே. நீரு சும்மா விட்டுட்மரே?"

பலவேசத்தின் ஆவேசம் கொஞ்சம் தணிந்தது. பதிலளிக்கையில் மட்டும், லேசாய் ஆவேசம் எட்டிப் பார்த்தது.

"பொம்புளயாச்சேன்னு பேசாம வந்துட்டேன். அதுக்கும் ஒரு 'பிளான்' வச்சிருக்கேன், ஆமா திருநெல்வேலிதானே போறீரு?"

"ஆமாம் வாரியரா?"

"நீரு போயிட்டு வாரும். பாக்க வேண்டிய ஆட்களப் பாத்து, இன்ஸ்பெக்டர் பய மவன ஒரு வாரத்துல மாத்திடணும்1 இல்லன்னா நீரு இருந்ததுல பிரயோசனமில்ல. மந்திரியப் பாக்கப் போறீரா? எம்.எல்.ஏயையா?"

மாரிமுத்து நாடார், தனது போர் வியூகத்தை அங்கே தெரிவிக்க விரும்பவில்லை .

"வாருஞ் சொல்றேன், செருக்கி மவன் என்ன பாடு படப் போறாமுன்னு அவனுக்கே இப்பத் தெரியாது. பாத்துடலாம் ஒரு கை. வாரும், தாம்போயி வரைக்கும் வாரும்."

பலவேச நாடார், மாரிமுத்து நாடாருக்கும் ம கொடுப்பதற்காக "ரெண்டு டீ போடுய்யா. ஒண்ணுல சக்கர வேண்டாம். எங்க அத்தானுக்கு சர்க்கர நோயி" என்று, ஏற்கனவே தெரிந்த விஷயத்தைத் தெரியப்படுத்தினார்.

இதற்குள் மாரிமுத்து நாடாரின் முதுகு வீங்கியிருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொண்டிருந்த, சில சமரச சன்மார்க்க சீலர்களில் ஒரு சிலர், உரக்கத் தொடைகளைத் தட்டிக் கொண்டே ஒரு தீர்மானம் கொண்டு வந்தனர்.

"போற போக்கப் பாத்தா நம்ம ஊர்ல கொலயே விழும் போல் இருக்கு! மாயாண்டி மவா வேற அத்தன பேரயும் பொட்டப் பயலுகன்னு சொல்லிட்டா. ஊர்க்கூட்டம் போட்டு ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வரணும். ஊர்னா ஒரு கட்டுப்பாடு இருக்கணும்."

உடனே ஒருவர். "ஏ, மச்சான் சொல்றத நல்லா கேட்டுக்குங்க! அப்படித்தான் பண்ணணும்! இல்லன்னா ஊரில கழுத மேயும்" என்றார்.

கோ.8.