பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊர் வயல் நட்டு...

5


கொண்டிருந்தார்கள். இரண்டரை ரூபாய் தினக் கூலி. விவசாயத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்சக் கூலியைப்பற்றி அதிகபட்சம் தெரிந்தவர்கள் எண்ணிக்கை கோழிமுட்டைதான். ஆகையால் மனக்குறை இல்லாமல் பெண்கள் நட்டுக் கொண்டிருந்தார்கள். காலையிலேயே கண்காணிப்புக்கு வரும் மாரிமுத்து நாடார் வராததால் சோம்பலாகவும், அதே நேரத்தில் அவர் வந்துவிடுவார் என்று வேகமாகவும், மாறிமாறி இயங்கி வந்தார்கள். நாடாரின் அண்ணன் மகன் வெள்ளைச்சாமி கிணற்றடியில் இருந்து நாற்றுக்கற்றைகளைக் கொண்டுவந்து பெண்களிடம் கொடுத்தான். அப்பன் சொத்தை விற்றுத் தின்றுவிட்டு, சின்னையாவிடம் வேலைபார்த்து வருகிறான். அவனை எல்லோரும் ‘பிராந்தன்’ என்பார்கள். ‘லூஸ்’ என்ற பட்டணத்து வார்த்தை கிராமப் பிரவேசம் செய்தால், அதற்குப் பெயர்தான் ‘பிராந்தன்’ என்பது.

முழுக்கருப்பான வெள்ளைச்சாமி, “அகலமா நடுங்க, சேத்து நடாதிய” என்று வரப்பில் இருந்துகொண்டே அதட்டினான்.

அதைக் கேட்டு, உலகம்மை சிரித்தாள். அவளுக்கருகில் நட்டுக் கொண்டிருந்த ஒரு கிழவி, “எதுக்கு பூ சிரிச்ச”, என்றாள்.

“பிராந்தன் பேசினது காதுல விழல பாட்டி?”

“என்ன சொன்னான்?”

“அகலமா நடணுமாம்.”

“அதுக்கென்ன நட்டாப் போச்சி. நமக்கும் வேல முடிஞ்ச மாதிரி இருக்கும்.”

“நீதான் மெச்சிக்கணும். இந்த வேல முடிஞ்சிட்டுன்னா மாரிமுத்து மாமா வேற வேல குடுப்பார். சூரியன் சாயுறது வறக்கிம் விடமாட்டாரு. மஞ்ச வெயிலு அடிச்சாத்தான் மஞ்ச தேச்சிக் குளிக்க முடியும்.”

வெள்ளைச்சாமி மீண்டும் கத்தினான். பிள்ளைகுட்டி இல்லாத சின்னய்யா சொத்து தனக்குச் சேரும் என்று எண்ணுபவன். அவன் நினைக்காமல் இருக்கும்போதே, ஊர்க்காரர்கள், அப்படி அவனை நினைக்க வைத்து சும்மா கிடந்த பிராந்தன் காதை ஊதிக் கெடுத்தார்கள். ஆகையால் பெத்த அப்பனையே அப்பனாய் நினைக்காத அவன், சின்னய்யாவை சொந்த அய்யாவாக நினைத்துக்கொண்டு, மற்றவர்களும் அப்படி நினைக்க வேண்டும் என்பது போல் கத்தினான்.