பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒதுங்கி வாழ்ந்து...

151


அது அதிகப்படியாகத் தெரிந்தது. அதே சமயம் நிச்சயதாம்பூலமான பின்னும், நின்றுபோன கல்யாணங்களும் நினைவிற்கு வந்தன. சேரியில் வேறு, அருணாசலம், பெட்டிஷன் எழுதுவதற்கென்றே பிறந்தவன் போல், முழுநேர விண்ணப்பதாரனாக மாறிவிட்டான். ஆகையால் “செருக்கி மவள கோர்ட்டு வழக்குன்னு இழுத்தா அலைய முடியாம ஓடிப்போயிடுவா. நம்மளையும் ஒரு பயலும் குற சொல்ல முடியாது” என்று அத்தான்காரரிடம் சொல்லி, அவரது அரைகுறை சம்மதத்தைப் பெற்ற பின்னர் வக்கீல் நோட்டீஸ் விட்டுவிட்டார்.

இதற்கிடையே, உலகம்மையை ஊர்க்காரர்கள் கொடுமைப்படுத்துகிறார்கள் என்றும், கோனச்சத்திரம் போலீஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும், அருணாசலம் பெட்டிஷன் போட்டான். போலீஸ் ஸ்டேஷன் சார்பில், ‘காளிமார்க் கலர் புகழ்’ ஹெட்கான்ஸ்டபிள் யோசித்தார். ஏற்கனவே உலகம்மையைப் பழிவாங்க வேண்டும் என்று நினைத்து, பல்வேறு அலுவல்கள் நிமித்தத்தால், அதை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போன அவர். பெட்டிஷனைப் பற்றிக் கேள்விப்பட்டதும், உலகம்மை மீதிருந்த பழைய விரோதத்தைப் புதுப்பித்துக் கொண்டார். இவ்வளவுக்கும் உலகம்மைக்கு, இந்த பெட்டிஷன் விவகாரம் இதுவரை தெரியாது.

ஹெட்கான்ஸ்டபிளே, மாரிமுத்து நாடார் வீட்டிற்கு வந்தார். உலகம்மையைச் சமூக விரோதியாகச் சித்தரித்தாலொழிய, சமூகம் அவளுக்கு எதிரியாக இருக்கும் விஷயத்தை மறைக்க முடியாது என்று மறைக்காமல் சொன்னார். அதோடு ஐ.ஜி. லெவலுக்குப் போயிருக்கும் பெட்டிஷனால் கோனச்சத்திரப் போலீஸ் நிலையத்திற்கே கெட்ட பெயர் என்றும், இந்தக் கெட்ட பெயரை நீக்க வேண்டுமானால், போலீஸ் நடவடிக்கை எடுக்கக்கூடிய அளவிற்கு உலகம்மை சமூக விரோதச் செயல் செய்து வருபவள் என்று ‘ரிக்கார்ட்’ பூர்வமாக நிரூபிக்க வேண்டும், என்றும் எடுத்துரைத்தார். அப்படி நிரூபிக்கத் தவறினால், ‘கோடு கிழித்த’ பழைய சமாச்சாரங்கள்கூட கிளப்பப்பட்டு, தனக்கு மட்டுமில்லாமல் மாரிமுத்து நாடாருக்கும் மானபங்கத்தோடு மற்ற பங்கங்களும் வரும் என்றும் சற்று மிரட்டினார்.

போலீஸை எதிர்ப்பவர்கள் சமூக எதிரிகளாக சித்தரிக்கப்பட வேண்டும் என்ற - (போலீஸ் நிலைய) க‘ல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி நின்ற’ - வழிவழி மரபை ஹெட்கான்ஸ்டபிள் பிடித்துக்கொண்டே, லாக்கப்பில் செத்த ஒருவனை, தப்பியோடித் தகாத செயலைச் செய்யும்போது ‘தற்காப்புக்காகச்’ சுடவேண்டிய நிர்ப்பந்தம்