பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

ஒரு கோட்டுக்கு வெளியே ...


நிறைவுடன் நின்றன. வரப்புகளில், காவல் பூதங்கள்போல் நின்ற ஆமணக்குச் செடிகள். விளக்கெண்ணெய் தயாரிப்பதற்காக எடுக்கப்பட்ட கொட்ட முத்துக்களைப் பறிகொடுத்துவிட்டு, அமங்கலிப் பெண்கள்போல் காட்சியளித்தன. ஒரு தோட்டத்தில், மிளகாய்ச் செடிகள் இருந்தன. வேண்டியமட்டும் காய் காய்க்கும்போது, நீராலும் உரத்தாலும் நிறைவுடன் உண்ட அந்தச் செடிகள். இப்பொழுது உரமாகப் போகட்டும் என்று விட்டு வைக்கப்பட்டிருந்தன. நீரும் இல்லை. அவற்றை உண்ணும் ஆற்றலும் அவற்றிற்கில்லை. முழுநேரம் வயலில் உழைத்து முதியவனாகி, பின்னர் திண்ணையில் கேட்பாரற்றுக் கிடக்கும் கிழவர்களுக்கும், மங்கிப்போய் மண்ணோடு மண்ணாகக் கிடக்கும் அந்தச் செடிகளுக்கும். ஏதோ ஓர் ஒற்றுமை இருப்பதுபோல் தோன்றியது. கீழே விழுந்து கிடந்த பழுப்புற்ற பனையோலைகள், அவர்களின் இறுதி முடிவை அறுதியிட்டுக் கூறுவதுபோல் தோன்றின.

மொத்தத்தில் அந்தத் தோட்டமே, ஒரு கிராமத்து மனிதனின் முதலையும் முடிவையும் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது.

லோகு சிந்தனையில் இருந்து விடுபட்டவனாய், கண்களில் இருந்து தென்னை மரங்களையும், வாழை மரங்களையும் வலுக்கட்டாயமாக விலக்கிக்கொண்டு, கையில் வைத்திருந்த நோட்டில் நோட்டம் செலுத்தினான். கவிதை எழுதுவதற்காக, அங்கே அவன் வரவில்லை. கவிதை எழுதுபவர்களைவிட ஒருசில கவிதைகள் காட்டும் நிதி நெறிகள்படி வாழ்பவர்கள்தான் கீட்ஸைவிட, ஷெல்லியைவிட, கண்ணதாசனைவிட மிகப் பெரிய மனிதர்கள் என்று எண்ணுபவன் அவன். திருமண அழைப்பை எப்படி எழுதலாம் என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.

அது, அவன் குடும்பத்துத் தோட்டம் அல்ல. அவன் அய்யா, அதை, கட்டுக் குத்தகைக்குப் பயிர் வைக்கிறார். அதுவும், இந்த நடப்பு வெள்ளாமை முடிந்ததும் முடிந்துவிடும். அவனுக்கு நினைக்க நினைக்கச் சிரிப்பாக இருந்தது. தோட்டத்தின் உரிமையாளர் தன் மகளை அவன் கட்டிக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். அவனும் சம்மதித்திருப்பான். ஆனால் பெண், ‘ஒரு மாதிரி நடந்து கொண்டவள்’ என்று பலர் சொல்லிவிட்டார்கள். ஒருவேளை திருமணம் ஆனபிறகு, விஷயம் தெரிந்திருந்தால், குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டிருக்க மாட்டான். ஆனால் கேள்விப்பட்ட பிறகு? ஆற்றுத் தண்ணீர் பல இடங்களில் அசுத்தப்பட்டிருக்கும் என்று