பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 163


இணைக்கப்பட்டிருந்ததாகவும் ஆண்குறியின் கொட்டைகள் யானைக் கிருப்பனபோல் பின்தள்ளி இருந்தனவென்றும் (சரிதம் 10 - 13) அசுவ கோசரின் புத்தசரிதம்கூறும். இவற்றையெல்லாம் புறக்கணித்துவிடும் தாசர்,

கலிவாகு சக்கரவத்தியின் அரசாங்கக் கலியுலகின் நீண்ட கணக்கு 1616 இல் சாக்கையகுல வீரவாகு வமிச வரிசையில் மண்முகவாவென்னும் அரசனுக்கும் மாயாதேவியென்னும் இராக்கினிக்கும் சித்தார்த்தி வருஷம் வைகாசி மாதம் 13 ஆம் நாள் பெளர்ணமி திதி கேட்டை நட்சத்திரம் மீனலக்கணம் ஆதிவாரம் அதிகாலையில் ஒர் ஆண் குழந்தை பிறந்தது.

அக்காலத்தில் தேசமெங்கும் சிற்சில நற்சகுணங்கள் தோன்றியதைக்கண்ட சிற்றரசர்களும் சோதியின் இடம் கண்டு கூறும் சோதிட சாஸ்திரிகளும் குழந்தையைக் காணும்படி வந்தார்கள்...

பெரியோன் மண்முகனை நோக்கி அரசே! குழந்தையைப்பற்றி நீர் யாதுக்கும் அஞ்ச வேண்டாம். இதன் அங்க பாத தாமரை ரேகையின் பலாபலனை ஆராயுங்கால் குழந்தை வளர்ந்து பாலதானத்தில் ஏக சக்கிராதி தலைத்தார் வேந்தனாக விளங்கினும் விளங்கும், அல்லது வாலறிஞனாகத்தோன்றி சருவ சீவர்களுக்கும் சற்குருவாக விளங்கினும் விளங்கும். ஆதலின் அம் மகத்துவத்தை என் கண் குளிரக் காணாது அற்பாயுளைப் பெற்றுள்ளதால் துக்கித்தேனென்றான் . . . பசுவின் பாலுண்டமர்ந்தகுழவிக்கு பாலிபாஷையில் கெளதமர் கெளதமர் என்னும் மறு பெயரையும் அளித்தார்கள்... அரச புத்திரன் வாலவயதில் கொண்ட விவேக மிகுதிக்கு வாலறிஞன், வாலறிஞன், வாலறிஞன் என்னும் பெயரையும் அளித்தார்கள் (ஆதிவேதம் 7).

என்று புத்தரது உற்பவக் காதையைச் சொல்லிச் செல்வார்.

சித்தார்த்தனுடைய திருமணம் பற்றிக் கூறும்போது புத்தசரிதம் அவனுடைய வயதைக்குறிக்காது அழகும் பண்பும் மிகுந்த யசோதரை எனும் பெண்ணை அரசன் தேர்ந்தெடுத்து மணம் முடித்து வைத்ததாகவும் சனத்குமாரனைப் போல் இருந்த சித்தார்த்தன் யசோதரையை மணந்து இந்திரனும் சசியும் போல் இன்பவாழ்வு வாழ்ந்ததாகவும் தெரிவிக்கும் (சரிதம் 25).

சித்தார்த்தனுக்குப் பதினாறு வயதானபோது மலையரசன் சுப்ர புத்தியின் பன்னிரண்டு வயதான மகள் அசோதரை மணமகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அரச குமாரன் தன் ஆற்றல்களை யெல்லாம் காட்டி அவளை மணம் செய்து கொள்வதாகத் தாசர் திருமணக் காதையைச் சீவகசிந்தாமணியில் வரும் ஒரு காட்சி போல் தருகிறார்.