உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

சு.சமுத்திரம் ❍

கரங் கூப்பி தலை தாழ்த்தினாள். அகத்திய, தொல்காப்பிய இலக்கிய கண்களாள்... பக்தி இலக்கிய படர் முகத்தாள்... ஐம்பெருங் காப்பியக் கழுத்தாள்.... அவள் இடுப்பிலே, சிற்றிலக்கிய ஒட்டியாணம்... விரல்களில், பத்துப் பாட்டு-எட்டுத் தொகை மோதிரங்கள், கால்களில், பாரதி, பாரதி தாச சலங்கைகள்... கால்களில், புதுக் கவிதைக் காலணிகள்... சங்க கால பார்வை... இந்தக் கால அலங் கோலம்... எந்தக் கேள்வியும் இல்லாமலே, இவள் விடை யளித்தாள். எல்லோருமாய் தனக்குப் போட்ட, பலவந்தமான சினிமா முக்காட்டை தூக்கிப் போட்டுவிட்டு, துயரோடு கேவிக் கேவி விளக்கம் சொன்னாள்.

"நான்... தமிழன்னை அல்லவாம், தாத்தாவே... எங்களுக்கு ஒரு, அசல் தமிழன்னைக் கிடைத்துவிட்டாள்... நீ போ... என்று என்னை, என் மக்களே கழுத்தைப் பிடித்து தள்ளிவிட்டார்கள்... அதுவும் முக்காபலா, டேக் இட் ஈஸி, மஸ்தானா... போன்ற கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டி அனுப்பி விட்டார்கள் திருப்பதி நாயகா..."

நாராயணருக்குப் பிரதியாய், லட்சுமி, பேத்தியிடம் கேட்டாள்.

"புகுந்த இடம் விட்டு, பிறந்த இடம் வந்தது தப்பும்மா... நீயே... உன் மக்களை மீட்டி இருக்கலாமே... நீதான் கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்துக்கு முன்தோன்றிய குடியைப் பெற்றவளாயிற்றே..."

"நையாண்டி பேச... இது வேளையில்லை... பாட்டியே... அறியாமையில், கயிறை பாம்பு என்று நினைக்கும் இனத்தை மீட்கலாம்... ஆனால், அகங்காரத்தில் பாம்பையே கயிறாய் நினைக்கும் கயவாளிப்பிள்ளைகளை எப்படி மீட்க முடியும்..