உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கோவை ஞானி
(கி. பழனிச்சாமி)

30.4.96

அணிந்துரை

“ஒரு கோட்டுக்கு வெளியே”, “ஊருக்குள் ஒரு புரட்சி”, ஆகிய நாவல்கள் மூலம் தமிழ் நாவல் இலக்கியத்தில் அடித்தள மக்களின் சமூக நீதிக்கான ஆவேசக் குரலாய், தமிழ் வாசகர்களின் நெஞ்சில் இடம் பிடித்தவர் சு.சமுத்திரம் அவர்கள். இவரது படைப்புக்களில் கலைத்தன்மை குறைவாக இருக்கிறது என்ற முறையில், நான், இவரது படைப்புகளை விமர்சனம் செய்திருக்கிறேன். இறுதியாக வந்த “வாடாமல்லி” நாவல் இக்குறையை பெருமளவில் போக்கியதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அயோத்தி மசூதி தகர்ப்பை அடுத்து, இந்தியாவில் எழுந்த கலவரங்களை மையப்படுத்தி அவர் எழுதிய “மூட்டம்” நாவல் காலத்தினால் செய்த நன்றி என்ற முறையில் நம் போற்றுதலுக்கு உரியது என்பதில் ஐயமில்லை.

முற்போக்கு வட்டாரத்தின் முன் வரிசையில் உரிமையோடும், தகுதியோடும் இடம் பெற்றிருக்கும் சமுத்திரம் அவர்கள், தமிழில் தலித் இலக்கிய வரிசையிலும் தகுதியோடு இடம் பெறத் தக்கவர்.

ஏகலைவன் பதிப்பகத்தின் வெளியீடாக வரும், “ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்” என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பு, தமிழ் மக்கள் ஏன் இப்படி வரலாற்றில் தாழ்வுற்று, அடிமைப்பட்டு, அழிந்து கொண்டிருக்கிறார்கள் என்ற பிரச்சினையை முன் நிறுத்துகிறது. தமிழ் மக்களின் அண்மைக் கால அவலம் பற்றி, வேதனையோடு, நெஞ்சப் பொருமலோடு, சமுத்திரம் இந்தக் கதைகளின் மூலம், தமிழ் மக்களின் நெஞ்சோடு உரையாடுகிறார். இத்தொகுப்பில் உள்ள பன்னிரண்டு கதைகளில், ஐந்து கதைகள், மேற்கூறியவாறு தமிழ் மக்களின் அவலம் பற்றிப், பேசுகின்றன. அசலான “தமிழ்த் தாய்” விரட்டப்பட்டு, போலித் தமிழ்த் தாய் அரியணையில் ஏறி அமர்ந்திருக்கிறாள். தமிழ் மக்கள், அவள் காலடியில் தலை வைத்தப் புரள்வதைச் சித்தரிக்கிறார். தமிழ்நாடு