பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96 சு.சமுத்திரம் 0

வெளியே தலைக்காட்டியது. கைக்கெட்டும் தூரம்; இழுத்துப்போட்டால், விறகாகும். கஞ்சிக்காய்ச்சலாம். கட்டிட வேலைக்கும் போகலாம். ராக்கம்மா குதிகாலில் நின்று கைகளை தூக்கிவிட்டாள்; அப்போது அவள் கண்கள் தற்செயலாக உள்ளே இருந்த குப்புவை பார்த்து விட்டன. அந்தத் தோட்டத்தில் அவன் வேலைக்காரனாய் பரிபாலனம் செய்கிறான். ஓலையை இழுத்தால், சேலையை இழுப்பான். இன்னாய்யா பேஜாரு.. தட்டிக்கேட்க நாதியில்லாத நாடுய்யா. 'அது சொல்றது மாதிரி எல்லாரையும் நிக்கவைச் சுடனும். முதல்ல குப்புவ..அப்புறம் கிடா மீசையை. இல்லல்ல... இந்த குப்பு வவுத்துக்காக வாய விக்கிற பய. சுடனும்னா கிடாமீசையைத்தான் முதல்ல சுடனும். சோமாரி...இன்னாக் கேள்வியா கேட்டான்..., இருடா இரு. அதுக்கிட்ட சொல்றேன் பார். அதப்பத்தி உன்கி தெரியாது. அது கையில ஒரு அரிவாளக் கொடுத்து ஒன்னண்ட அனுப்பிவைக்கறேன் பார்... என் மூஞ்சியப்பாக்க நேரம் இல்லன்னு தெனாவுட்டாயா பேசற.. பெரிய மன்மதரு.. உன்னப் பார்க்காட்டி தூக்கம் வராது பாரு...து....து...'

ராக்கம்மா.. "அதை"ரேக்கி விடவேண்டுமென்ற ஆவேசத்தோடு இப்போது வேகமாக நடந்தாள். எதிரே நான்கைந்துப் பெண்கள் வந்துக்கொண்டிருந்தார்கள். அவள் ஏரியாப் பெண்கள். ஒருத்தி சுமதி, தனி ரகம். ஒன்பதில் பாசாகி, பத்தாவதில் பெயிலானவள். ஆகையால் மற்றப் பெண்களைவிட சற்று வித்தியாசமாக தூக்கலாக ஜாக்கெட் போட்டிருந்தாள். இன்னொருத்தி, கருப்பாக இந்தாலும் லட்சணமாக இருந்தாள். மற்றொருத்தி சிவப்பாக இருந்தாலும் அவலட்சணம்..இன்னொன்னு சின்னப் பொண்ணு, பன்னிரெண்டு வயதிருக்கும். காக்காவின் அலகை வெட்டினால் எப்படியிருக்குமோ அப்படிப்பட்ட முகம். பெயர் லட்சுமி, அவளோடு அவள்ஆயாவும் வந்தாள்.