பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103 ※ஒரு வீட்டின் கதை

வல்லிக்கண்ணன்


பேச்சாலும் நடிப்பினாலும் ரசிகர்களுக்குக் களிப்பூட்டினாள் 'அல்லி அர்ஜுனா'வில் அல்லியாகத் தோன்றி அமர்க்களப்படுத்தியவள் 'பவளக்கொடியாய் மாறி இனியவளாய், எழிற்கொடியாய் ஜிலுஜிலுத்தாள். இப்படியாக எல்லோர் நினைப்பிலும் பேச்சிலும் இடம் பெறக்கூடிய காந்த சக்தியாய் திகழ்ந்தாள் மிஸ் கிருஷ்ணவேணி.

அவள் புகழ் காந்தியில் கிறுகிறுத்துப் போனவர்களில் வெயிலுகந்தநாதனும் ஒருவன் ஆனான்.

அவ்வூரில் ஒருநாள் விட்டு ஒருநாள் நாடகம் நடைபெற்றது. ஒவ்வொரு நாடகத்தின் போதும் முதல் வரிசைப் பிரமுகர்களில் ஒருவனாக வெயிலு விளங்கினான். அந்நேரங்களில் அவன் தன்னைத் தானே ஒரு 'அயன் ராஜபார்ட்' ஆக எண்ணிக் கொள்வது உண்டு. மிஸ் கிருஷ்ணவேணி அரங்கத்தில் அநாயாசமாக ஆட்சி புரிகிறபோது, அவள் கவனத்தை கவர்வதற்கான வேலைகளை அவன் செய்வான். கை தட்டுவான். தனிரகச் சிரிப்பு ஒலிபரப்புவான். "ஆகா...பிரமாதம்...பேஷ்பேஷ்" என்று பாராட்டுச் சொற்களை உதிர்ப்பான். இதற்கெல்லாம் பலன் இல்லாது போகவில்லை. 'முத்துச்சிரிப்பு மோகனாங்கி என்றும், 'புன்னகைப் பூஞ்சோலை', 'இளமுறுவல் எழிலரசி', 'மின்னல் சிரிப்பழகி' என்றும் பலவாறாக நோட்டீஸ்களில் விளம்பரப்படுத்தப்பட்டு வந்த சொக்கும் சிரிப்பை அவனுக்காகக் காட்டி, ஓயில் பார்வை ஒன்றையும் அவன் பக்கம் அனுப்பிவைப்பாள் அந்த நடிகை.

ஒரு நாடகத்தில் மிஸ் கிருஷ்ணவேணி வசீகர ராஜகுமாரனாக வேடம் தரித்து மேடையில் மின்னிக் கொண்டிருந்தாள். மினுக்கும் வயலட் நிறவெல்வட் கோட்டும் கால்சட்டையும்; அவற்றில் அங்கங்கே மினுமினுக்கும் ஜரிகை வேலைப்பாடுகள். வெள்ளை வெளேரென மிளிரும் ஸாக்ஸ் கால்களோடு ஒட்டியிருந்தன. அழகான கறுப்பு ஸ்லிப்பர்கள் அவளது சின்னஞ்சிறு பாதங்களுக்கு வடிவமைத்தது. தலையிலே ஜோரான கிரீடம். அதன் முகப்பில் இனிமையாய் சிலிர்த்து நின்ற வெள்ளைப்பறவைச் சிறகு போன்ற ஒரு அழகு அணி. இடையிலே தங்கநிற உடைவாள், நீளமாக. கலர்ச்சிகரமாக ஒப்பனை செய்யப்பட்ட முகம். அதிலே குறுகுறுத்துச் சுழலும் ஒளிச்சுடர்கள்