பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12   ✲   ராதை சிரித்தாள்

வல்லிக்கண்ணன்



அவன் அந்தப் பெரிய வீட்டில் தனியாகத்தான் இருந்தான். அவன் தாய், தந்தையர் எல்லோரும் இறந்து பல வருஷங்களாகி விட்டன. கடன் வகைகளில் சொத்தெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து போன பிறகு, அந்த விடும், ஏதோ கொஞ்சம் நிலமும் மட்டும் தங்கியிருந்தன. 'சரிதான், சாகிறவரை சாப்பாட்டுக்குப் போதும். வேலை கீலை ஒண்னும் பார்க்க வேண்டியதில்லை என்று முடிவு கட்டி விட்டவன் அவன். தனது திட்டத்துக்குக் குடும்பவளர்ச்சி வீண் தடங்கலாக அமையும் என்றெண்ணி, கல்யாணமே வேண்டாம் எனத் தீர்மானித்திருந்தான். எத்தனையோ பேர்கள் 'புத்தி' சொல்லிப் பார்த்தும், கேட்காததனால் 'அவனா உருப்படத் தெரியாதவன்!....எங்கே உருப்படப் போறான்' என்று சமூகப் பெரியார்கள் கைகழுவி விட்டார்கள். அதையெல்லாம் பற்றி அவன் கவலைப்படவில்லை. ஹோட்டலில் சாப்பிடுவது, இஷ்டம் போல் சுற்றுவது, திடீரென்று நினைத்துக் கொண்டு எந்த ஊருக்காவது பிரயாணம் கிளம்பிவிடுவது என்கிற தனது நியமங்களை ஒழுங்காகச் செய்து வந்தான். அப்பொழுது அவனுக்கு இருபத்தெட்டு, முப்பது வயசிருக்கும் என்று தெரிந்தவர்கள் பேசிக் கொண்டார்கள்.

அவன் ராதையின் நிலைமையை கவனித்தது உண்டு. பாழாகும் அந்தப் பெண்ணின் வாழ்வை எண்ணிக் கூட அவன் சிலசமயம் வருத்தப்படுவதும் உண்டு. 'பாவம், இப்படித்தான் எத்தனையோ பெண்கள் சமூகத்திலே வதங்கிச் சாகிறார்கள். காலாகாலத்திலே கல்யாணமாகி, அனுபவிக்க வேண்டிய சுகங்களை யெல்லாம் அனுபவிக்க முடியாமல் போகிறபோது, ஏக்கமும் சோகமும் தானாக வளர்கின்றன. பல வருஷங்களுக்குப் பிறகு கல்யாணமானதும் கூட மகிழ்வு இருப்பதில்லை. ஏக்கமும் குமுறலும் ஹிஸ்டீரியாவிலே கொண்டுபோய் விட்டு விடுகின்றன. அப்புறம், பெண்ணுக்கு ஏதோ தெய்வக் குற்றம், பிசாசு பிடிச்சிருக்கு என்று மருந்துக்கும் மந்திரத்துக்கும் பணம் கொட்டி அழவாங்க. நல்ல குடும்ப வாழ்க்கை!' என்று அலுத்துக் கொள்வான்.

அவன் ராதையை அடிக்கடி பார்க்க முடிந்தது. அவள் அழகாகத்தான் இருந்தாள். 'பிரமாதமான அழகு இல்லை. இருந்தாலும் இவ்வளவு அழகு போதாதா பெண்களுக்கு? சில