பக்கம்:ஒரே உரிமை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவள் என்னவானாள்?

25

பாவம், அந்த அலைகளுக்கு என்றும் வெற்றிகிட்டப் போவதில்லை என்பது நிச்சயம். என்னுடைய முயற்சியும் அப்படித்தான் முடியுமோ?

பின் ஏன் இந்த விபரீத சந்தேகம் என்றுமில்லாதபடி என் உள்ளத்தில் எழுகிறது?

“ஒருவேளை அவள் செத்துத்தான் போயிருப்பாளோ?” இப்படி எண்ணியதுதான் தாமதம்; “இல்லை; அவள் சாகவில்லை......!” என்கிறது எங்கிருந்தோ வரும் ஒரு குரல்.

திரும்பிப் பார்க்கிறேன்; என்ன விந்தை இது! மூன்று மாதங்களுக்குப் பிறகு — இல்லை, மூன்று வருடங்களுக்குப் பிறகு—இல்லையில்லை, மூன்று யுகங்களுக்குப் பிறகு — அதோ, என் கண்ணில் படுகிறாளே, அவள் யார்?

அவள் அவளேதானா? — ஆம், சந்தேகமேயில்லை; அவள் அவளேதான்!

அவளுடன் செல்பவன் — அவள் சகோதரனாயிருப்பானோ?— இருக்கவேயிருக்காது! — அவ்வளவு லாவகமாக இடையில் கை கொடுத்து அவளை அணைத்துக் கொண்டு செல்லும் அவன், அவள் கணவனைத் தவிர வேறு யாராயிருக்க முடியும்?

அவ்வளவுதான்; என் தலை சுழல்கிறது; ‘கலகல’வென்ற சிரிப்பொலி காற்றில் மிதந்து வந்து என் காதில் விழுகிறது; நான் வெறித்துப் பார்க்கிறேன் — அவர்கள் இருவரும் ஏதோ பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் செல்கிறார்கள்!

“சரி, இனி நம்மைப் பொறுத்தவரையில் அவள் செத்தவளாகத்தான் ஆகிவிட்டாள்!” என்று ஏங்குகிறது என் அப்பாவி மனம்.


ஒ.-2
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/27&oldid=1148934" இலிருந்து மீள்விக்கப்பட்டது