பக்கம்:ஒரே உரிமை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தேற்றுவார் யார்?

77

வேண்டுமே!” என்ற கவலை அவளைப் பீடித்தது. முன்னும் பின்னும் பார்த்துக்கொண்டே பரபரப்புடன் நடந்தாள்.

இவ்வாறு எண்ணி அவள் இரண்டடிகூட எடுத்து வைத்திருக்கமாட்டாள். “ஏய்! கூடையில் என்னாம்மே?” என்று யாரோ அதிகார தோரணையில் கேட்பது போலிருந்தது, அம்மாயி திரும்பிப் பார்த்தாள். ‘கிரீச்’சென்று நின்ற லாரியிலிருந்து யாரோ ஒருவர் இறங்கிக் கொண்டிருந்தார்.

அவர் சுகாதார அதிகாரி என்பதை அறிந்து கொண்ட அவள் கதி கலங்கிப் போய்விட்டாள். “சாமி, சாமி! ஏழையை ஒண்ணும் செய்யாதிங்க, சாமி!” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டே கூடையை இறக்கிக் கீழே வைத்துவிட்டு, அந்த அதிகாரியின் காலைப் பிடித்துக் கொண்டாள்.

அதிகாரி ஓர் அலட்சியப் புன்னகை புரிந்துவிட்டு, “உன்னைத்தானே ஒன்றும் செய்யவேண்டாம் என்கிறாய்? சரி, போ!– டேய்! யாரடா, அங்கே?– உ.ம்...!” என்று உறுமினர்.

அடுத்த நிமிஷம் அவர் அருகிலேயே நின்று கொண்டிருந்த ஒரு நகர சுத்தித் தொழிலாளி, அம்மாயியின் கூடையைப் பருந்துபோல் பாய்ந்து தூக்கிக்கொண்டு லாரியை நோக்கி ஓடினான்.

“ஐயையோ!” என்று அலறினாள் அம்மாயி.

அதை அவன் லட்சியம் செய்யவில்லை. பழங்களை லாரியில் கொட்டிக் கொண்டு, கூடையை அவளுக்கு முன்னால் வீசி எறிந்துவிட்டு வண்டியில் ஏறிக்கொண்டான். சுகாதார அதிகாரியும் அவனுடன் ஏறிக்கொண்டார். அவருடைய முகத்தில் அலாதிக்களை வீசிற்று. “அம்மாயியின் கூடையைக் காலி செய்ததின் மூலம் காலராவை நகரத்திலிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/79&oldid=1149016" இலிருந்து மீள்விக்கப்பட்டது