பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

அவனது பிஞ்சு மனமும் விரியத்தான் செய்தது. மிஞ்சிக்கிடந்த அந்த ஒரு பைசாக் காசையும் ‘பிச்சை' இட்ட மனம் விரியாமல் என்ன செய்யும்!...

"ரொம்பப் புண்ணியம், அண்ணா!” என்றாள் ஏழைச்சிறுமி.

"நீ என்ன தங்கச்சி, என்னமோ புண்ணியத்தைக் கண்டதாட்டம் பேசுறே?...எனக்குப் புண்ணியம் வேண்டாம்; உன்னோட பசியைப் போக்குறதுக்குத் துளியளவு உதவி செய்ய முடிஞ்சவரைக்கும் நான் சந்தோஷப்படுறேன். இன்னமும் நிரம்பச் செய்யத்தான் ஆசை. ஆனா, ஆண்டவன் என்னைச் சோதிக்கத் தொடங்கியிருக்கக்கூடிய நேரம் கெட்ட நேரமம்மா இது! ... நான் என்ன செஞ்சிட்டேன்! ... ம்! ..."

"நீ ரொம்ப ரொம்ப நல்ல அண்ண ன்! ..."

“ம்... உனக்காச்சும் நான் நல்லவனாத் தோணுறேனே, அது போதும்!" அவன் கண் இமைகள் நனைந்தன. அவன் கேட்டான் : "தங்கச்சி, உம் பேர் என்ன?"

அச்சிறுமி சொன்னாள்: "பூவழகி!"

உமைபாலனின் வயிறு கெஞ்சியது; சிறுகுடலைப் பெருங்குடல் கவ்வியது. எதிர்ப்புறம் இருந்த ஹோட்டலும் அதன் முகப்பு வாசலில் கூடியிருந்த பிச்சைக்காரக் கும்பலும் அவனுள் ஒரு தத்துவமாகத் தெரிந்தது. அந்த ஒரு தத்துவமே வாழ்க்கையாகவும் அவனுக்குத் தோன்றத் தொடங்கியது. 'ஊம்!' என்று மீண்டும் நெடுமூச்செறிந்தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/8&oldid=1110984" இலிருந்து மீள்விக்கப்பட்டது