ஓர் இரவு
101
சே : தம்பீ! இங்கே என்னடா இந்த நேரத்தில்.
வா : (குளறுகிறான்} இல்லை...சும்மா...இப்படி...
ர : யாரு இந்தத் தம்பீ?
சே : நம்ம பக்கத்து வீடு. ராமாயணக் காலட்சேபம் செய்யறாரே ரங்காச்சாரி, அவர் மகன்.
[வாலிபன் நழுவுகிறான். ரத்னம் சிரித்துவிட்டு]
அப்பா ராமாயண காலட்சேபம் செய்கிறாரு. மகன் இப்படி, பாரத காலட்சேபத்துக்குக் கிளம்பி இருக்கான்! டாக்டர்! இதுக்குத்தான் ரோந்து வாரதுன்னு பேரு, போவட்டும் வாங்க. இந்தமாதிரி இடத்திலே எல்லாம் தெரிஞ்சவங்களா இருந்தாக் கூட கண்டுகொள்ளக்கூடாது. கண்டும் காணாத மாதிரியாத்தான் போயிடுவாங்க. நீங்க ரெண்டு பேரும் புதிசு.
[வேதம் வீட்டருகே போய்ச் சேருகிறார்கள்.]
காட்சி - 43
இடம் :- வேதம் வீடு
இருப்போர் : ஆறுமுகம், வேதம், (பிறகு) சேகர். ரத்னம்.
[வாயிற்படி அருகே போய் உரத்த குரலில்.]
ர : டே! ஆறுமுகம்! ஆறுமுகம்!
[வேகமாக ஆறுமுகம் ஓடிவந்து ரத்னத்தின் முன்பு அடக்கமாக நின்றுகொண்டு]
ஆ : ஏண்ணேன்! இந்த நேரத்திலே இவ்வளவு தூரம்! சொல்லி அனுப்பினா நான் வரமாட்டனா?
ர : டே! ஆறுமுகம்! கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே எவனாவது ஜெமீன்தாரன் வந்தானா, இந்தப் பக்கத்திலே, யாரு வீட்டுக்காவது.
ஆ : (யோசித்து) ஜெமீன்தாரனா? ஆள் எப்படி இருப்பான்? இந்த நேரத்திலே எப்படி அண்ணேன் கண்டுபிடிக்கறது. இங்கே வருகிறவன் அத்தனை பேருந்தான் ஜெமீன்தாரன். மிட்டாதாரன்னு சொல்லிக்கறான். நாம் கண்டமா, அவனெல்லாம் நிஜமாகவே ஜெமீன்தாரன் தானான்னு.
சே : இந்த ஜெமீன்தாரன் கொஞ்சம் வயசானவன். மீசைக்குச் சாயம் பூசியிருப்பான். கையிலே தங்கப் பூண் போட்ட தடி இருக்கும். குடிச்சிவிட்டு இருப்பான்.
ஆ : (உள்பக்கம் பார்த்து) வேதம்! தா, வேதம்!
[வேதம் வருகிறாள் ரத்னத்தைக் கண்டதும் மரியாதையாக.]