உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

அறிஞர் அண்ணா


இன்னோர் குடி : உட்காரு பிரதர், ஒரு கை.

சே இல்லை! நாங்க இங்கே ஒரு சினேகிதரைத் தேடிக் கொண்டு வந்தோம்...

முதல் குடி : அப்ப, நாங்களெல்லாம் சிநேகிதரு இல்லையா, பிரதர்! உட்காரு பிரதர், [கிளாசைக் காட்டி] ஜின் பிரதர்! ஜின்!

வேறு குடி : விஸ்கி வேணுமா பிரதர்?

சே : வேண்டாம்.

[ரத்னம் வாங்கி மளமளவென்று குடித்து விட்டு

ர : இங்கே காணோம். வாங்க. அவன், இப்படி ரோந்து போயிருப்பான்.

சே : ரோந்து என்றால்?

ர : அது உங்களுக்குப் புரியாத பாஷை. அவன் பெரிய பொம்பளைப் பைத்யம் பிடிச்சவனல்லவா? அந்தத் தெருவா போயிருப்பான்.

[இருவரும் போகின்றனர்.]

முதல் குடி : வெறும் கையை முழம் போடற பயலுக.

வேறு குடி : டே! ஒரு சமயம் போலீசா இருக்குமோ?

முதல் குடி : அடச் சே! ஏண்டா பயப்படறே! ஆடுடா! (இன்னொருவனைப் பார்த்து கிளாசைக் காட்டி) போடுடா.

காட்சி - 42

இடம் :- வேதம் வீடு.
இருப்போர் :- வேதம், ஆறுமுகம்.

(பிறகு) ஒரு வாலிபன்.

[வாசற்படியில் நின்றுகொண்டிருக்கிறாள் வேதம் விசாரத்துடன்; கலைந்த பொட்டு, வாடிப்போன பூ, சரிந்த ஆடை. சுழலும் கண்ணுடன் பக்கத்திலே உட்கார்ந்து கொண்டு சிகரெட் பிடிக்கிறான், அவளுடைய 'ஆசை நாயகன்' ஆறுமுகம்.]

ஆ : ஏ! வேதம்! உன் மூஞ்சி இருக்கிற அழகுக்கு முக்கா ரூபா கொடுப்பானாடி எவனாச்சும். முகரக்கட்டையைப் பாரு. போய்ப் படுடி, இன்னக்கி எவனும் சிக்கமாட்டான்.

வே : அட, என் மன்மதக் குரங்கே! நீ கெட்டகேட்டுக்கு கேலி வேறேயா? நீ போய்ப்படு, பக்கத்திலே நீ தடியனாட்டம் இருந்தா, எவன் நுழைவான்; உன்னை ஒரு பெரிய பிரபுன்னு நினைச்சிக்கிட்டுப் போயிடுவான்க. உனக்கென்ன வந்தது கவலை. வீட்டுக்காரிக்கு வாடகைப் பணம் 9 ரூபா தரணும், வாயிலே