பக்கம்:ஓ மனிதா.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

ஓ மனிதா

இயக்கம். இந்த இயக்கத்தில் சம்பந்தப்பட்டவர்கள் சொல்லாமல் சொல்வது என்ன? செய்யாமல் செய்வது என்ன—? ‘கூட்டுறவுதானே? உங்கள் வீட்டுச் சொத்தா, எங்கள் வீட்டுச் சொத்தா, யார் வீட்டுச் சொத்தோ, அதைப் பற்றி நமக்கு என்ன கவலை? அடி, கொள்ளை’ முடிந்தால் தனியாகவே அடி! இல்லா விட்டால் கூட்டுச் சேர்ந்து கூட்டுக் கொள்ளை அடி! தப்பித் தவறி அகப்பட்டுக் கொண்டுவிட்டால் இரண்டு வருடமோ, மூன்று வருடமோதானே உள்ளே இருந்து விட்டு வரவேண்டும்? வந்த பின் அடித்ததை வைத்து உட்கார்ந்து சாப்பிட்டால் போச்சு!’ என்பதுதான்.

அதாகப்பட்டது, எதையாவது செய்து ‘உழைக்காமல் சாப்பிட வேண்டும்.’ இதுவே உங்கள் வாழ்க்கையின் லட்சியம், இல்லையா?

ஓ, மனிதா! எங்களுக்கு வேண்டாம் இந்த வாழ்க்கை; எங்களுக்கு வேண்டாம் இந்த லட்சியம். உங்களைப் போல் நாங்கள் கூட்டுறவு வாழ்க்கை வாழவும் வேண்டாம்; கூட்டுக் கொள்ளை அடிக்கவும் வேண்டாம்.

அதற்காக நாங்களும் உங்களைப் போல் நாட்டுவாசிகளாகவும் வேண்டாம்; நாகரிகத்தில் மிதக்கவும் வேண்டாம்.

உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்—தயவு செய்து எங்களைக் காட்டு வாசிகளாகவே வாழவிடு!

அங்கே ஒன்றுக் கொன்று உதவி நாங்கள் நடத்தும் கூட்டு வாழ்க்கையில் தாயும் பிள்ளையும் மட்டும் அல்ல, வாயும் வயிறும்கூட ஒன்றாகவே இருக்கும். பசிக்காகப் பனங்காயை மட்டுமே நாங்கள் பதம் பார்த்துப் பறிப்போம்; சொத்துக்காகப் பங்காளியின் தலையைப் பதம் பார்த்துப் பறிக்க மாட்டோம்.

என்ன இருந்தாலும் நாங்கள் மிருகங்களல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/123&oldid=1371367" இலிருந்து மீள்விக்கப்பட்டது