பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

137



"ஆமாம்! இது கருநெல்லியின் கனி. இதனை உண்பவர் நெடுநாள் வாழ்க்கையினர் ஆவர். இதனை அறிந்த யான் மிக முயற்சியுடன் இவற்றைக் கொணரச் செய்தேன். ஆனால் உண்ண எடுத்தபோது தங்களின் நினைவு வந்தது. யான் போரே தொழிலாகிவிட்ட நாடு காவலன். இதனை உண்டு என் உடலை வலிமையாக்குவதாற் பயன் யாதுமில்லை. தங்களை உண்ணச் செய்தால், நெடுநாள் தாங்கள் தமிழ்ப்பணியைத் தொடரக் கூடுமென்று கருதினேன்.நான் உண்பதை நிறுத்திவிட்டுத்தங்களை அழைத்து வரச்செய்து உண்ண வைத்தேன்” என்றான் அதியன்.

அதியனின் அளவற்ற அன்பை அறிந்ததும், ஒளவையாரின் உள்ளம் பெரிதும் கனிந்தது. தாம் நெடுநாள் வாழக் கருதுவதுதான் உலகினரின் இயற்கை. அதற்கு மாறாகத் 'தன்னினும் தமிழறிஞர் வாழ்வதே சிறப்பானது' என்று கருதினான் அதியன். அவன் அன்பு வியக்கத்தக்கது! அவன் செயல் போற்றத்தக்கது!

‘தேவர்கள் அமுதம் கடைந்தபோது, அதனிடையே கொடிய நஞ்சும் எழுந்தது. அதனால் தேவர்கள் நடுநடுங்கினர். அப்போது சிவபிரான் நஞ்சை அள்ளித் தானே உண்டான். அது அவன் கழுத்திலே நின்று, செம்மேனிச் செல்வனின் கண்டத்தை நீலகண்டமாக ஆக்கிற்று. தேவர்கள் அதன்பின் அமுதைக் கடைந்து எடுத்து, உண்டு, சாவை வென்றவராயினர்.

தேவர்களை வாழ்விக்கக் கருதித் தான் நஞ்சையுண்டு அருளாளனாக நின்ற அந்த நீலமணிமிடற்றணின் செயலையும், அதியனின் செயலையும் ஒன்றாகவே எண்ணி இன்புற்றார். அவர் முகத்திலே வியப்பும் மகிழ்ச்சியும் இணைந்து நிழலாடின.

“யான் சொன்னவை அனைத்தும் உண்மையே. இதனை யுண்டவர் நீண்ட நாள் வாழ்வர். அதனைத் தாங்கள்தாம் அடைதல் வேண்டும். அதற்கே தங்கட்கு ஊட்டினேன், முதலிற் சொல்லியிருந்தால் தாங்கள் உண்ணாது என்னை உண்ணுமாறு வற்புறுத்தியிருக்கவும் கூடும்! அதனையும் விலக்கவே, இவ்வாறு செய்தேன்” என்று அதியன் மீண்டும் கூறினான்.

வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை,
ஆர்கலி நறவின் அதியர் கோமான்,
போரடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே! தொன்னிலைப்