பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

147



தந்தையும் பிறரும் முதலில் ஆத்திரம் அடைந்தாலும், அடுத்து 'அவள் கற்புச் செல்வி, அதனால் அவள் காதலை அவள் நிறைவு செய்து வெற்றி கண்டாள்' எனத் தெளிவுற்றனர்.

அனைவரும் அந்த மணவிழாவிற் கலந்துகொள்ளப் புறப்பட்டனர். அவளை வாழ்த்தவும் அவள் மணக் கோலத்தைக் கண்டு களிக்கவும், ஒருவருக்கொருவர் முந்திச் செல்வாராயினர்.

இவ்வாறு, நிகழ்ந்த அறவாழ்வின் செப்பத்தைத் தாய்க்குச் செவிலித்தாய் சொன்ன செய்தியைக் கொண்டு காட்டுகின்றார் ஒளவையார்.


பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன்மூ தாலத்துப் பொதியில் தோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி - ஆய்கழல்
சேயிலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே  (குறுந். 15)


பறை - மணப்பறை. இறை கொள்ளல் தங்கியிருத்தல். தொன்மூதாலம் - மிகப் பழைய ஆல மரம். பொதியில் - பொது விடம்: ஊர் மன்றம் நாலூர் - ஒருர் கோசர் - ஒரு சாதியார்; மறமாண்பினும், சொல் தவிராமையினும் சிறந்தவர். இவர் தாம் வாக்களித்தபடி மோகூர்ப் பழையனைத் தாம் காத்து நின்றனர். சேயிலை - சிவந்த இலைப்பகுதி, சிவப்பு, குருதிக் கறையால் உண்டாயது; அது வீரத்தின் அடையாளம். விடலை - இளைஞன். கழல் - வீரக்கழல்

இவ்வாறு, சமுதாயத்தின் மரபுகளையும் ஒளவையார் மிகவும் நுட்பமாக உரைத்துள்ளார். இத்தகைய செய்யுட்கள் பலவற்றையும், அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய அகத்துறை நூல்களுட் காணலாம்.

◇ ◇ ◇