பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

31



ஒரு சமயம், ஒளவையார் நடந்து சென்று கொண்டிருந்தார். மாலை மயங்கி இருள் சூழ்ந்து கொண்டிருந்த நேரம். பெரிய மழையும் பெய்யத் தொடங்கிற்று. மழையில் நனைந்தவராக குளிரால் நடுங்கியபடியே ஒளவையார் சென்று கொண்டிருந்தார்.

அவர் எதிரிலே ஒரு சிறு குடிசை தோன்றவே, அவர் கால்கள் தாமே அதனை நோக்கிச் சென்றன. அந்தக் குடிசையில் இருந்தவர்கள், தம் குடிசையை நோக்கி வருகின்ற மூதாட்டியைக் கண்டனர். அவரை ஏற்று அவருக்கு உதவ ஆவலுடன் எதிர்பார்த்து நின்றனர்.

ஒளவையார் குடிசைக்குள் நுழைந்ததும், அந்தப் பெண்கள் தம்முடைய நீலச்சிற்றாடை ஒன்றை அவருக்கு அளித்து, அவருடைய நனைந்த உடைகளை மாற்றச் செய்தனர்.

அந்த இரு பெண்களின் அன்பான உபசரிப்பு ஒளவையாரின் உள்ளத்திலே பலவித நினைவுகளை எழச் செய்தன.

பாரியைக் காணச் சென்றிருந்தார் ஒளவையார். பாரியின் அளவற்ற தமிழன்பு அவரை ஆட்கொள்ள, அங்கே பல நாட்கள் தங்கிவிட்டார். ஒருநாள், அவனிடம் விடைபெற்றுத் திரும்பிக் கொண்டிருந்தார். பாரிக்கு அவரைப் பிரிவதற்கு மனமே இல்லை. மேலும் சில நாட்களாவது அவரை இருக்கச் செய்ய வேண்டுமென நினைத்தான். தானே குதிரை மேற்சென்று ஒளவையாரின் கையிலிருந்த மூட்டையைப் பறித்துக் கொண்டு போய்விட்டான். 'பாரியின் நாட்டிலும் திருடனோ!' என்று வெதும்பிய ஒளவையார், அவனிடம் அதனை உரைத்துக் கண்டிக்க நினைத்து, அவனிடத்திற்கே மீண்டும் வந்தார். அவன் அவரிடம் தன் செயலைக் கூறிப் பொறுத்தருள வேண்டினான். அவனுடைய அன்பின் செயல் அவரை ஆட்கொண்டது.

அந்த நிகழ்ச்சியை நினைத்துக் கொண்டார். அந்த அன்பின் சாயலை இந்தப் பெண்களின் செயலிலும் கண்டு உவந்தார்.

அடுத்து மற்றொரு நிகழ்ச்சி அவர் உள்ளத்தே எழுந்தது.

பழையனூரில் காரி என்றொரு வள்ளல் இருந்தான். அவன் தமிழார்வத்தில் தலைசிறந்தவன். அவனைக் காணச் சென்றிருந்தார் ஒளவையார். அவன் ஒளவையாரைத் தன் குடும்பத்தாருள் ஒருவராகவே நினைத்து அன்பு காட்டி வந்தான். ஒருநாள் அவன் குடும்பத்தார் நிலத்திற்குக் களை வெட்டுவதற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். காரி ஒளவையார் கையிலும் ஒரு களைக்கொட்டைத் தந்தான். விருந்தாக நினையாது தன்னையும் அவருள் ஒருவராகவே மதித்த காரியின் அன்புச் செயல் ஒளவையாரின் மனத்தில் ஆழப் பதிந்து இருந்தது.