பக்கம்:கடற்கரையினிலே.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

கடற்கரையிலே


வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி
ஆரம் படைத்த தமிழ்நாடு"

என்று பாடுவேன்; ஆனந்தக்கூத்து ஆடுவேன்.

"நல்லோர் போற்றும் அல்லிக்கேணியே ! உன் மலர்க்கேணியின் அழகைக் கண்டுதான் மாமுகில் வண்ணன் அதனருகே கோயில் கொண்டானோ? அன்று பஞ்சவருக்குத் துணைபுரிந்த அஞ்சன வண்ணன் - பார்த்தனுக்குப் பாகனாகிய பரந்தாமன் அறப் பெருந் துணைவன் - அடியார்க்கு எளியன் - நின்னகத்தே நின்று அருள் புரிகின்றான். அந்தக்

"கண்ணனைக் கண்டேன் - எங்கள்
கண்ணனைக் கண்டேன் - மணி
வண்ணனை ஞான மயிலினைக் கண்டேன்"

"தொல்புகழ் வாய்ந்த அல்லிக்கேணியே! இந்நாளில் உன் அருமையை அறிவார் யார்? உன் கடற்கரையில் அன்று தமிழ்த்தென்றல் தவழ்ந்தது; இன்று மேல் காற்று வீசுகின்றது. அன்று உன் அரங்கத்தில் எங்கள் தமிழன்னை ஆனந்த நடனம் புரிந்தாள், இன்று ஆங்கில மாது களியாட்டம் ஆடுகின்றாள். அவளுடைய வெள்ளை நாவிலே தெள்ளிய தமிழ்வளம் ஏறுமா? அவள் இறுமாந்த செவியிலே தேமதுரத் தமிழோசை சேருமா? அந்தோ ! திருவல்லிக்கேணியே வேற்றரசின் கொடுமையால், நீ சீர் இழந்தாய்; பேர் இழந்தாய்; 'திரிப்பளிக்கே' னாகத் திரிந்துவிட்டாய் !

'அல்லிக் கருங்கடலே! உன் அழகமைந்த கரையிலே வெள்ளையர் விளையாடித் திரிகின்றார்; வெறியாட்டயர்-