பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



22

பதற்காக முன்னேறிக் கொண்டிருந்தவர்கள் எழுப்பிய ஓசைகளைக் கேட்டபோது, எங்கள் எல்லோரையும் ஒரேயடியாக அமுக்கி, சின்ன மனிதர்களான எங்களை நசுக்கிவிடக் கூடிய பூமியின் பெரும் பாரத்தின் கீழே எங்களுக்கு எப்படியிருந்திருக்கும் என்பதை நீர் உணர முடிகிறதா, ஐயா.

        அப்புறம் பல நாட்கள் நாங்கள் அந்த ஓசையைக் கேட்டோம். மந்தத் தொனியாகயிருந்து பின் கனமேறி நாளுக்கு நான் தெளிவு ஏற்றுக் கிளம்பிய ஒலிகளைக் கேட்டோம். வெற்றி வீரர்களின் வெறி மகிழ்ச்சி எங்களைப் பற்றிக் கொண்டது. பிசாசுகள் மாதிரி, கொடிய பேய்கள் போல, உழைத்தோம் நாங்கள். சோர்வு உணர்ந்தோ மில்லை;ஊக்க மொழிகள் வேண்டினோ மில்லே. ஆ, ரொம்ப நன்றாக இருக்கிறது. இளவேனில் நாளிலே இன்ப நடம் புரிவது போலிருந்தது. அப்படித் தானிருந்ததய்யா, நான் சத்தியமாய் சொல்லுகிறேன். நாங்கள் குழந்தைகளைப் போல அன்பும் மென்மையும் பெற்றுவிட்டோம். பலபல நெடிய மாதங்களாக பூமிக்கடியிலே இருளினுள்ளே அகழ் எலி மாதிரித் தோண்டிக் கொண்டிருந்த இடத்திலே மற்றவர்களைச் சந்திக்க வேண்டும் என்ற ஆசை எவ்வளவு உணர்வு மிக்கது, எத்தகைய சக்தி வாய்ந்தது என்பதை நீர் அறிய முடியுமானால், ஆகா!”
         நிகழ்ந்ததை எண்ணியதால் எழுந்த கிளர்ச்சியினால் அவன் முகத்தில் தனிக்களை ஏற்பட்டது. அவன் நெருங்கிது, மனிதத்துவம் நிறைந்த ஆழ்ந்த கண்களால், தன் பேச்சைக் கேட்டிருந்தவனின் கண்களுள் பார்வை செலுத்தி இனிய ஆனந்தக் குரலிலே பேசினான்.
         "முடிவாக மண்ணின் கடைசி அடுக்கு உதிர்ந்துவிழுந்து, டார்ச் விளக்கின் பிரகாசமான மஞ்சள் ஒளி திறந்த பகுதியை வெளிச்சப்படுத்தியதும், ஆனந்தக் கண்ணீர் வடித்து நின்ற கரிய முகமொன்றைக் கண்டோம். அதற்குப் பின்னால் இன்னும் பல சுடர்கள்; மேலும் பல முகங்கள்!