பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



9




உண்மை புரிந்தது

அரசியாரும் அரசரும் அகுவாடோ என்பவன் மூலம் அனுப்பிய உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து, இஸ்பானியோலாவிலிருந்து புறப்பட்ட கொலம்பஸ் காடிஜ் துறைமுகம் வந்து சேர்ந்தான். காடிஜுக்கு வந்து சேர்ந்தபோது அவன் மிக மிக மனம் நொந்து போயிருந்தான். நம்பிக்கை மிக்க தன்னை ஆண்டவன் ஏன் இப்படிச் சோதிக்க வேண்டும் என்று எண்ணி எண்ணி அவன் மனம் ஒடிந்து போயிருந்தான். இயல்பாகவே அரச பக்தியுள்ளவனாயிருக்கும் தன்மீது சில தீயர்கள் கூறிய பழியுரைகளைக் கேட்டு அரசரும் அரசியும் அவநம்பிக்கை ஏன் கொண்டார்கள் என்று எண்ணிய போது அவன் மனம் வெடித்துவிடும் போலிருந்தது. ஆகவே அவன் அரண்மனைகளுக்கும் கோட்டைகளுக்கும் விருந்துக்குப் போவதை வெறுத்து, புனித மடாலயங்களிலே தங்கிக் காலத்தைக் கழித்து வந்தான். பிறவித் துயர் போக்கும் பேரிறைவனையே எண்ணி எண்ணித் தொழுது கொண்டிருப்பதே உய்யும் வழியென்று முடிவு கட்டி எளிய வாழ்க்கையை மேற்கொண்டு அந்த மடாலயங்களிலே தங்கினான்.