பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9
 


யான் புதுச்சேரியில் வாழும் பகுதி, பிண ஊர்வலம், மண ஊர்வலம், அரசியல் ஊர்வலம் முதலிய எல்லா ஊர்வலங்களும் போகும் மையப் பகுதியாகும். எங்கள் பகுதியில் நாடோறும் மாலையில் ஓரிரு பிண ஊர்வலம் போய்க் கொண்டேயிருக்கும். சில நாளில் பிண ஊர் வலம் சென்ற ஒரு மணி நேரமோ-இரண்டு மணி நேரமோ கழித்து மண ஊர்வலம் செல்வதுண்டு. இந்த இரண்டையும் மாறி மாறிப் பார்க்கும் யான் ஒருவகை மயக்கத்தில் ஆழ்ந்து போவேன். இந்த மயக்க உணர்வின் போதே, 'பக்குடுக்கை நன்கணியார்’ என்னும் புலவர் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்று நினைவுக்கு வருவதுண்டு. அதன் கருத்தாவது:-'ஓர் இல்லத்தில் சாப்பறை கொட்டவும், மற்றோர் இல்லத்தில் மிகவும் குளிர்ந்த மணமுழவின் இனிய ஓசை எங்கும் ததும்பவும், கணவருடன் வாழும் மகளிர் மலரும் அணிகலன்களும் அணிந்து மகிழவும், கணவரைப் பிரிந்த பெண்டிரின் துன்பம் தோய்ந்த கண்களில் நீர் உகுந்து துளிக்கவும், இவ்விதம் ஏறு மாறாகப் பண்பில்லாத கடவுள் உலகைப் படைத்து விட்டான். அம்மவோ! இவ்வுலக வாழ்வு மிகவும் கொடியது-துன்பமானது; ஆதலின் இவ்வுலக இயற்கையை உணர்ந்தோர், அல்லனவற்றை நீக்கி நல்லனவற்றையே-இனியனவற்றையே செய்வாராக!” என்பது அப்பாடற் கருத்து. இனிப் பாடல் வருமாறு:—

“ஒரில் நெய்தல் கறங்க, ஒரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூ அணிஅணியப், பிரிந்தோர்
பைதல் உண்கண் பணிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்ற அப்பண்பு இலாளன்:
இன்னாது அம்ம-இவ்வுலகம்:
இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தேரோ” (194)

என்பது பாடல். நிலையாமையுணர்வின் போதும், யான், இப்பாடலில் உள்ள பொருட் சுவையோடு சொற்சுவை