பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83


பட்டாடை இரவுக்குப் பாரம் என்று
பாலாவி ஆடையினை எடுத்து வந்தார்.
கொட்டாவி விடாக்குண்டு மல்லி கைப்பூ
கொண்டையிலே ஏற்றென்றார்; புரிந்து கொண்டேன், எட்டிவைத்தேன்; காதலுக்கும் நாணத் துக்கும்
இழுப்புப்போர்! தோழியர்கள் உள்ளே தள்ளிப்
பட்டென்று சாத்திவிட்டார் கதவை; இந்தப்
பாரியின்தேர் மெதுவாகக் குலுங்கி நின்றேன்.


இனந்தெரிந்து மணந்தவரின் முன்னால், ஏனோ
இனந்தெரியா நாணம்; தா மரை அரும்பு
குனிந்தபடி முகங்குனிந்து நின்றேன்; மெல்லக்
குறும்பாக அவர்கனைத்தார்; குப்பென் றெல்லாம் நனைந்துவிட்டேன் வியர்வையினால்; குதிரை வேகம்
நாடியிலே நான்பெற்றேன்: நடுக்கம் பெற்றேன்.
கனிதின்றால் என்னவென்று மெதுவாய்க் கேட்டுக் கண்ணிவைத்தார்; கனிசுமந்த கனிநான் சென்றேன்.


கனிகேட்டார் எனத்தந்தேன்; அவரோ என்றன்
கல்வைத்த வளைக்கையைப் பற்றிக் கொண்டார்.
தனியான மின்சார ஒட்டம், இன்று
தன்னிணைப்புப் பெற்றதனால் அதிர்ச்சி பெற்றேன். மணிமார்பில் எனையேந்தித், தொங்கு கின்ற
மாம்பழத்தை விரலாலே தூக்கு தல்போல்
கனிமுகத்தைக் கையாலே நிமிர்த்திப் பார்த்தார்; கண்ணிரண்டும் வெட்கத்தால் கூம்பி விட்டேன்.