பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

 தமிழ்க் கலைச்சொல்லாக்கத்தில் மற்ற மொழிகளில் காண முடியாத ஒரு தனித்தன்மை தமிழ்க் கலைச்சொற்களுக்கு உண்டு. அதுதான் வேர்ச்சொல் தேடல்.

ஆங்கில மொழியில் ஒரு புதிய கலைச்சொல்லை உருவாக்க வேண்டுமெனில், அதற்கான வேர்ச்சொல்லை லத்தீன், கிரீக், ஹீப்ரு அல்லது வேறு மொழிகளில் தேடிப் பெறவேண்டும். ஆங்கில மொழியில் வேர்ச்சொல் கிடைப்பது மிக அரிது. ஏனெனில், ஆங்கில மொழி, மேற்கூரிய மொழிகளின் கூட்டுக் கலவையாகும்.

ஆனால், அதே சமயத்தில் இந்தியிலோ அல்லது மராத்தியிலோ ஒரு புதிய கலைச்சொல்லை உருவாக்க வேண்டுமெனில் அதற்கான வேர்ச்சொல்லை சம்ஸ்கிருதத்திலோ, பாலி, பிராகிருத மொழிகளிலோ தேடிப் பெற வேண்டும். கன்னட, தெலுங்கு, மலையாள மொழிகளின் சொல் உருவாக்கத்துக்கான வேரை சமஸ்கிருதத்திலோ அல்லது தமிழிலோ தேட வேண்டும். ஆனால், தமிழில் ஒரு கலைச்சொல்லை உருவாக்க வேண்டுமெனில், அதற்கான வேர்ச்சொல்லைத் தமிழில் மட்டுமே காண முடியும். வேறு எந்த இந்திய மொழிகளிலும் தேடிக் காணவே முடியாது.

'இன்றையக் கலைச்சொல் தேவையை நிறைவு செய்யுமளவுக்குத் தமிழில் அறிவியல், தொழில்நுட்பக் கலைச் சொற்களுக்கான வேர்ச்சொற்கள் வேண்டுமளவு கிடைக்க வாய்ப்புண்டா? என வினா எழுப்பத் தோன்றலாம். இதற்கு நாம் விடை கூறுவதைவிட தமிழை அறிவியல் பூர்வமாக, மொழியியல் அடிப்படையில் ஆராய்ந்தவரும் 'மொழியியல் தந்தை' எனப் போற்றப்படுபவருமான டாக்டர் எமினோ அவர்கள் கூறுவதைக் கேட்போம். "உலகத்து மொழிகளிலேயே மிக அதிகமான வேர்ச் சொற்களையுடைய மொழியாகத் தமிழ் அமைந்துள்ளது" எனப் பாராட்டியுள்ளது இங்கு நினைவுகூரத்தக்கதாகும். வேர்ச்சொற்கள் தமிழ் இலக்கியங்களில் மட்டுமல்ல, அன்றாட வாழ்விலும் மிகுதியாக விரவிக் கிடக்கின்றன. அதையெல்லாம்விட தமிழில் புதிய வேர்களை எளிதாக உருவாக்கவும் இயலும். அந்த அளவுக்கு நெகிழ்வுத் திறமுள்ள மொழியாகத் தமிழ் அமைந்துள்ளது.