பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

 துணிவதில்லை. மற்றவர்களைச் செய்யச் சொல்லும் முன், தான் அதில் முனைப்போடு, ஈடுபட்டு வழிகாட்ட வேண்டும் என்ற உணர்வு ஏனோ அவர்களிடம் இல்லாமற் போய்விடுகிறது.

இந்நிலையில்தான், ஒரளவு துறையறிவு பெற்றவர்கள் முனைந்து மேன்மேலும் துறையறிவை முனைப்போடு வளர்த்துக்கொண்டு, அதனடிப்படையில் சொல்லாக்கம் செய்து, அதனை அவ்வத்துறை வல்லுநர்களின் மேற் பார்வையோடு செப்பனிட்டு, தகுதிமிக்க கலைச்சொற்களாக உருவமைத்து வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெறுகிறார்கள். இவர்களின் வெற்றி தமிழின் வெற்றியாகவும் அமைகிறது. என்போன்ற ஆர்வலர்கள் அம்முறையில் தான் வீறுநடைபோட்டு வருகிறோம். 'தோள் கண்டார் தோளே கண்டார்' என்றாற்போல் துறை வல்லார்க்கு அவர் சிறப்பறிவு பெற்ற ஒரு துறை மட்டுமே களமாக அமைகிறது. ஆனால் என்போன்ற ஆர்வலர்கட்கு எதனையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற பெருவேட்கையோடு முனைந்து கற்பதால், 'இதுதான் நம் துறை' என்ற வேறுபாடு இல்லாமல், இன்னும் சொல்லப்போனால் எல்லையே இல்லாமல், எல்லா துறைகளுமே களமாயமைகின்றன. இவ்வகையில் தான் உயிரியல் முதல் கணினி ஈராக அனைத்து அறிவியல், தொழில்நுட்பத் துறைகளுக்கான ஏழு கலைச்சொல் தொகுதிகளை (சுமார் நான்காயிரம் பக்கங்களில், சுமார் ஒன்றரை இலட்சம் கலைச்சொற்கள்) வெளியிட முடிந்தது. வேறு சிலரும் என்னைப் போலவே சொல்லாக்கப் பணியில் முனைப்புக் காட்டி உழைத்து வருகிறார்கள்.

கலைச்சொல்லாக்க முயற்சியைப் பொறுத்தவரை, ஆர்வமுடையவர்கட்கு, சொல்லாக்க வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்ற நன்னோக்கில், ஆங்கிலக் கலைச்சொல்லுக்கு நேர்த்தமிழ்க் கலைச்சொல் சொல்வதோடு அமையாமல், சொல்விளக்கம், பொருள்விளக்கங்களைப் படத்தோடு தருவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இதைப் படித்துத் தெளிவுபெறும் சொல்லாக்க ஆர்வலர்கள் இதனினும் சுருங்கிய வடிவிலான சொற் செட்டும், பொருட்செறிவுமுடைய, நயமிக்க கலைச்சொற்களை உருவாக்க வாய்ப்பேற்படுத்த வேண்டும் என்பதே என் நோக்கம்.