பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19


நிறுவனங்கள் தத்தம் அலுவலகங்களில் பயன்படுத்திவந்த தனித்த கணினிகளை நன்றாகப் பிணைத்து, கணினிப் பிணையங்கள் (Computer Networks) உருவாக்கப்பட்டன. ஒரே அலுவலகத்தில் (Local Area), ஒரு பெருநகரில் (Metro Area) மற்றும் கணினிகளை ஒருங்கிணைத்துப் பிணையங்கள் உருவாயின. தகவல் மற்றும் மூலாதாரங்களைப் பகிர்ந்து கொள்வது இதன் மூலம் சாத்தியமானது. அரசுத் துறையினர், பல்கலைக் கழகங்கள், பொது நூலகங்கள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், வங்கிகள் மற்றும் ஏனைய வணிக நிறுவனங்கள் தத்தம் செயல்பாடுகளுக்காக உருவாக்கிய குறும்பரப்பு/விளிபரப்புப் பிணையங்கள் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டன. ஒவ்வொரு நாட்டில் இவ்வாறு உருவாக்கப்பட்ட முதுகெலும்புப் பிணையங்கள் (Back Bone Network) ஒருங்கிணைக்கப்பட்டு இணையம் (Internet) உருவானது. உலகின் எந்த மூலையிலிருந்தும் வேறெந்த மூலையில் குவித்து வைக்கப்பட்டுள்ள தகவல் களஞ்சியத்தை ஒரு நொடியில் பெற வழியேற்பட்டது.

எல்லா விந்தைகளுக்கும் அப்பால் 'இன்டர்நெட்' எனப்படும் இணையம் உலகம் அனைத்தையும் ஒரு கிராமமாக (Global Village) ஆக்கிவிட்டது. தொழிற்புரட்சிக்கு அடுத்தபடியாகத் தகவல் புரட்சி (information Revolution) இணையத்தின் மூலமாய் இன்று உலகைக் குலுக்கிக் கொண்டிருக்கிறது. மனிதன் காலையில் எழுந்து இரவில் உறங்கப் போகும்வரை அனைத்துப் பணிகளையும் இணையம் மூலமே நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. செய்தித்தாள் படித்தல், உறவினர்க்குக் கடிதம் அனுப்புதல், அறிஞர்களுடன் கலந்துரையாடல்/கருத்துப் பரிமாற்றம், நண்பர்களுடன் அரட்டை, இசை/சினிமாப் பொழுதுப்போக்கு, விளையாட்டு, நூலகப் படிப்பு, தொலைபேசி உரையாடல், ரயில்/ விமானப் பயண முன்பதிவு, கடையிலுள்ள பொருள்களைப் பார்வையிடல், பல்கலைக் கழகத்தில் படித்துப் பட்டம் பெறுதல், .......... மூலம் இணையத்தில் இணைத்துக் கொண்டு செய்து முடிக்க முடியும். வேறென்ன வேண்டும்?