பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21


நிறுவனங்களிலும் தமிழ்நாட்டு இளைஞர்கள் முக்கிய பதவிகளில் இருக்கின்றனர். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்கள் கணினி அறிவியலைத் தேர்வுச் செய்து விரும்பிப் படிக்கின்றனர்.

பத்திரிகைகளில், வானொலியில், தொலைக்காட்சியில் நாள்தோறும் கணினித் துறை சார்பான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்தியாவில் வேறெந்த மாநிலத்தை விடவும் கணினி விழிப்புணர்வு தமிழ்நாட்டில் அதிகமாகவே உள்ளது.

அச்சுத்துறையில் நுழைந்த முதல் இந்திய மொழி தமிழ். அது போலவே இணையத்தில் நுழைந்த முதல் இந்திய மொழி தமிழ் தான். தமிழுக்கென்றே தமிழில் 13, 000 இணைய தளங்கள் இருப் பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய மொழிகளிலேயே கணினிக் கென்று தனியாகப் பத்திரிகை வெளிவந்தது தமிழ்மொழியில்தான். கணினி அறிவியல் தொடர்பான ஏராளமான புத்தகங்களும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்மொழியில் வெளியிடப்பட்டுள்ளன.

கணினித் திரைகளில் தமிழ்மொழி உலாவந்து கொண்டிருக் கிறது. உரைத் தொகுப்பான்கள் (Text Editor), சொல் செயலிகள் (Word Processor), தகவல்தள மேலாண்மை (Database Management), இ-மெயில் (E-Mail), இணைய உலாவி (Browser), கணக்கியல் தொகுப்புகள் (Account Packages), குழுந்தைகள், மாணவர்கட்குப் பயன்படும் பாடங்கள், வெளிநாட்டில் வாழும் மக்கள் தமிழ் கற்றுக் கொள்ள உதவும் தொகுப்பு, பல்லூடக விளையாட்டுகள் (Multimedia Games) இன்னும் இவை போன்ற மென்பொருள் தொகுப்புகள் தமிழ்மொழியிலேயே வெளிவந்து கொண்டிருக்கின்றன. இப்படிப் பட்ட காலத்தில்தான் நான்காம் தமிழாகிய அறிவியல் தமிழின் ஒர் அங்கமான கணினித் தமிழ் செழுமைப் பெற்று வளரத் துடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், கணினி அறிவியல் வளர்ந்த வேகத்தில் கணினி தமிழ் வளரவில்லை என்றே கூறவேண்டும்.

பேச்சுத் தமிழில் நெல்லைத் தமிழ், கோவைத் தமிழ், சென்னைத் தமிழ் என்றெல்லாம் வழங்கப்படுவதுபோல கணினித் தமிழும் ஊருக்கு ஒரு வடிவம், நாட்டுக்கு ஒரு வடிவம் என ஆகிவிடுமோ என அஞ்சவேண்டியுள்ளது. அறிவியல் என்பது அனைத்துலகுக்கும் பொதுவானது. அதுபோலக் கணினித் தமிழும்